அரசு பங்களா வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை
அரசு பங்களா வழங்கும்படி எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை
ADDED : ஜன 19, 2024 12:37 AM

பெங்களூரு : தனக்கு தேவையான அரசு இல்லத்தை வழங்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம், எதிர்க்கட்சி தலைவர் அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் அந்தஸ்து கொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கு, பெங்களூரில் அரசு பங்களா, வாகனம், மெய்க்காப்பாளர் உட்பட, பல சலுகைகள் அளிக்க வேண்டும். ஆனால், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் அசோக்குக்கு, இன்னும் அரசு பங்களா வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக, அரசு தலைமை செயலர் ரஜனீஷ் கோயலுக்கு அசோக் எழுதியுள்ள கடிதத்தில், 'பெங்களூரின், குமாரகிருபா தெற்கு பகுதியில் உள்ள, எண் 1 பங்களாவை எனக்கு வழங்குங்கள். தொண்டர்களை சந்திக்க வசதியான பங்களா வேண்டும்.
ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, ரேஸ்வியூ காட்டேஜில் உள்ள எண் 1 மற்றும் எண் 3 பங்களாவை வழங்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமார கிருபா தெற்கில் உள்ள, எண் 1 பங்களா, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஸ்வியூ காட்டேஜில் உள்ள எண் 1 பங்களா, அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கும், எண் 3 பங்களா அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரேஸ் வியூ காட்டேஜின், எண் 1 பங்களா அதிர்ஷ்டமானதாக நம்பப்படுகிறது. இதற்கு முன் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடியூரப்பா, இதே இல்லத்தை கேட்டார்.
ஆனால், அது அன்றைய அமைச்சர் சா.ரா.மகேஷுக்கு ஒதுக்கப்பட்டதால், எடியூரப்பாவின் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. இதனால், அவர் டாலர்ஸ் காலனியில் உள்ள, தன் இல்லத்தில் இருந்து பணியாற்றினார்.
தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் அசோக், இந்த இல்லத்தை தனக்கு விட்டுத் தரும்படி கோரியுள்ளார். அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

