ADDED : பிப் 25, 2024 02:39 AM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்,'' என, மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் தமிழர்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க., தொண்டர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, பெங்களூரில் அக்கட்சி தொண்டர்கள் நேற்று கூறியதாவது:
கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க., கட்சி சார்பில் சில தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.,வுடன் கூட்டணி இருந்ததால், இறுதி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது.
தற்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளதால், வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் ஐந்தாறு தொகுதிகளில் போட்டியிட கட்சித் தலைமை எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்,'' என்றார்.

