இயற்கையோடு வாழ் இயற்கைக்கு திரும்பு என்பது தான் இலக்கு!
இயற்கையோடு வாழ் இயற்கைக்கு திரும்பு என்பது தான் இலக்கு!
ADDED : ஜன 21, 2024 12:38 AM

திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள புளியனுார் கிராமத்தில், காட்டுப் பள்ளியை நடத்தி வரும், 'குக்கூ' சிவராஜ்:
இந்த உலகில், குழந்தைகளின் இயல்பு காணாமல் போய் விட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் துவங்கப்பட்டது தான், 'குக்கூ' காட்டுப்பள்ளி.
இப்பகுதியில் வாழும் குழந்தைகள் தான் இந்தப் பள்ளியின் மாணவர்கள். இதைப் பள்ளிக்கூடம் என்று சொல்வதை விட, 'குக்கூ குழந்தைகள் இயக்கம்' என்று சொல்வது தான் சரி.
மலைக் கிராமங்களில் நுாலகம் அமைப்பது, அரசு பள்ளிகளில் கலை பயில் முகாம் நடத்துவது, புத்தகங்கள் வெளியிடுவது என, முழுக்க குழந்தைகளை சார்ந்தும், சூழலியலைச் சார்ந்துமாக செயல்படுகிறது இப்பள்ளி.
இங்குள்ள குழந்தைகளுக்கு கலை, கைத்தொழில், இலக்கியம் வழியாக மாற்றுக்கல்வியை அளிப்பது தான் இதன் நோக்கம். குறிப்பாக, 'இயற்கையோடு வாழ்; இயற்கைக்குத் திரும்பு' என்பது தான் இலக்கு.
இங்கு கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு, இயற்கைக்கும், மனிதர்களின் தேவைகளுக்கும் இடையே சமநிலையை நோக்கமாக கொண்டு சொல்லிக் கொடுக்கிறோம்.
குழந்தைகளின் படைப்பாற்றலைத் துாண்டி, இயற்கை, இசை, மரபுக் கலைகள், நாடகம், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமூகம் - அரசியல் பற்றிய பேச்சுகள், புத்தகங்கள், சினிமா விமர்சனங்களையும் அறிமுகப்படுத்துகிறோம்.
குழந்தைகளை, அவர்கள் சொந்த வழியில் கண்டறிய இந்த மாற்றுக்கல்வி பயன்படும். நமக்கு என ஒரு மரபு இருக்கும், அது துண்டிக்கப்படக் கூடாது; தொடரணும். அதற்கு இந்த மாற்றுக்கல்வி பயன்படும்.
'தும்பி' என்ற சிறார் மாத இதழையும் நடத்துறோம். வண்ணங்கள் நிறைந்த ஓவியக் கதை உலகை குறைந்த செலவில் கிராமத்துக் குழந்தைகளுக்கு தமிழில் படிக்கச் செய்வது தான் இதன் நோக்கம்.
அதேபோல காந்தியம், சூழலியல், தற்சார்பு, கல்வி, வேளாண்மை, இறைமை, வாழ்வியல், தத்துவம், குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை அழகழகான வடிவ நேர்த்தியுடன், 'தன்னறம் நுால்வெளி' என்ற பதிப்பகம் வாயிலாக கொடுக்கிறோம்.
தற்போது சமீப காலமாக, 'ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்' வாயிலாக, தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் இருக்கும் பழங்கிணறுகளை துார்வாரி, மறுபடியும் பயன்படுத்துகிற அளவுக்கு மாற்றிக் கொடுக்குறோம்.

