பூத் கமிட்டியில் கோட்டை விட்டதால் தோல்வி கட்சியினருக்கு ம.ஜ.த., - எம்.எல்.சி., அறிவுரை
பூத் கமிட்டியில் கோட்டை விட்டதால் தோல்வி கட்சியினருக்கு ம.ஜ.த., - எம்.எல்.சி., அறிவுரை
ADDED : பிப் 12, 2024 06:47 AM
கோலார்: ''சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட குறைபாடுகள் போல், லோக்சபா தேர்தலில் ஏற்படாதவாறு அனைத்து ஜாதி பிரிவினரையும் இணைத்து பூத் கமிட்டியில் செயல்வீரர்களை களத்தில் இறக்க வேண்டும்,'' என்று ம.ஜ.த., - எம்.எல்.சி., கோவிந்தராஜு வலியுறுத்தினார்.
கோலாரில் நேற்று நடந்த ம.ஜ.த., செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சி எம்.எல்.சி., கோவிந்தராஜு பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த.,வும் அங்கம் வகிக்கிறது. லோக்சபாவில் ம.ஜ.த., உறுப்பினர்களும் இருந்தால் தான், நமது கட்சியும் தேசிய அளவில் உள்ளது என கவுரவமாக கருத முடியும். வரும் தேர்தலில் ம.ஜ.த.,வுக்கு எதிர்பார்த்த அளவில் இடம் கிடைக்கும்.
சட்டசபைத் தேர்தலில், கோலார் மாவட்டத்தில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தான் ம.ஜ.த., தோல்வி அடைந்தது.
அப்படியும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். கோலார் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
ஆனால், சில ஜாதி ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகளை தவறான பிரச்சாரத்தின் மூலம் பெற முடியாமல் போனது. பூத் கமிட்டியில் அனைத்து தரப்பினரை ஒருங்கிணைக்க தவறி விட்டோம்.
என்ன தவறு நடந்தது என்பதை ம.ஜ.த.,வினர் உணர்ந்தால், அடுத்த தேர்தலில் நம்மை வீழ்த்த முடியாது. கடந்த முறை ஓட்டுச் சாவடிக்குழு மீது கவனம் செலுத்தவில்லை. ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து சென்றிருந்தால், ஓட்டுகள் சரிந்திருக்காது.
லோக்சபா தேர்தலில், ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி உள்ளதால் இரு கட்சிகளுமே ஒருங்கிணைந்து பூத் கமிட்டியில் வலு சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. கோலார் லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் பூத் கமிட்டியில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் தாலுகா செயலர் நடராஜ், ம.ஜ.த., பிரமுகர் ஸ்ரீநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

