டில்லியில் தாயும், மகனும் உயிரிழப்பு உ.பி., ராஜஸ்தானில் 4 பேர் பலி
டில்லியில் தாயும், மகனும் உயிரிழப்பு உ.பி., ராஜஸ்தானில் 4 பேர் பலி
ADDED : ஜன 10, 2024 12:22 AM
புதுடில்லி:டில்லியில் சாலையை கடந்த தாயும் மகனும், பைக் மோதி உயிரிழந்தனர்; உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில்ஏற்பட்ட விபத்தில், நான்கு சகோதரர்கள்பலியாகினர்.
புதுடில்லி மடிப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் மாலை, சீமா, 32, அவரது மகன் தக் ஷ், 2, ஆகிய இருவரும்சாலையைக் கடந்தனர்.
அப்போது வேகமாக வந்த பைக், இருவர் மீதும் மோதியது. இருவரும் துாக்கி எறியப்பட்டனர். பைக்கில் வந்தவரும் துாக்கிவீசப்பட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், மூவரையும் மீட்டு, மகாராஜா அக்ரசென் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சீமா மற்றும் அவரது குழந்தை இருவரும் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
பலத்த காயம் அடைந்த நிலையில் பைக் ஓட்டி வந்த பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா, 32, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் கஞ்சாஸ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராம் சமுஜ் மவுரியா, 65, துங்நாத் மவுரியா, 60, ஆகியோர், ஒரு வழக்கு தொடர்பாக, தங்கள் வழக்கறிஞர் சுல்தான்பூரைச் சேர்ந்த பங்கஜ் குமாருடன், கவுரிகஞ்ச் சென்றனர்.
அங்கிருந்து பைக்கில் சகோதரகள் இருவரும் திரும்பி வந்த போது, நாகசர்கஞ்ச் சுரங்கப்பாதை அருகே எதிரில் வந்த லாரி, பைக் மீது மோதியது; மூவரும் துாக்கி வீசப்பட்டனர். போலீசார் இருவரையும் மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், சகோதரர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதிசெய்தனர்.
இதுகுறித்து, முசாபிர்கானா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தானின், கோட்டா மாவட்டம் சியானா கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் பைர்வா, 60, ராம்லால் பைர்வா, 42, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றனர். பூண்டி சுரங்கப்பாதை அருகே எதிரில் வந்த கார், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இருவரும், அதே இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு பூண்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் உடல்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டன. கார் டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.

