இளம் வாக்காளர்களை ஈர்க்க இயக்கம் துவங்கியது! : 8 கோடி இளைஞர்களை அணுக பா.ஜ., திட்டம்
இளம் வாக்காளர்களை ஈர்க்க இயக்கம் துவங்கியது! : 8 கோடி இளைஞர்களை அணுக பா.ஜ., திட்டம்
ADDED : ஜன 14, 2024 12:30 AM

லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை இலக்காக வைத்து செயல்பட்டு வரும், மத்தியில் ஆளும் பா.ஜ., இளம் வாக்காளர்களை ஈர்க்கும் பிரமாண்ட இயக்கத்தை துவக்கியுள்ளது. நாடு முழுதும் உள்ள, எட்டு கோடி முதல் முறை வாக்காளர்களை அணுகுவதற்கு பா.ஜ., பெரும் திட்டத்தை தீட்டியுள்ளது.
கடந்த இரண்டு தேர்தல்களாக, பா.ஜ.,வின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, இளம் வாக்காளர்களின் ஓட்டுகள் அமைந்தது.
'ஜனநாயகத்தின் பெருமையை மேலும் சிறப்பாக்கும் வகையில், இளம் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளிக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
உலகிலேயே மிகவும் இளமையான நாடு என்ற பெருமையுடன் உள்ளதால், இளைஞர் சக்தியை, நாட்டின் வளர்ச்சிக்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பா.ஜ., அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பிரமாண்ட திட்டம்
கடந்த இரண்டு தேர்தல்களில் இளம் வாக்காளர்களில், 41 சதவீதம் பேர் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ளனர். இதில், 68 சதவீதம் பேர் முதல் முறையாக ஓட்டளித்தவர்கள்.
கடந்த, 2014 தேர்தலில் காங்கிரசுக்கு, இளம் வாக்காளர்களில், 17 சதவீதம் பேர் ஓட்டளித்தனர். இது, 2009 தேர்தலைவிட, 10 சதவீதம் குறைவாகும். கடந்த, 2019 தேர்தலில், 20 சதவீத இளைஞர்கள் ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைத்தது.
இந்த சூழ்நிலையில், இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், மிக பிரமாண்ட இயக்கத்தை பா.ஜ., துவக்கியுள்ளது.
இதையொட்டி, கட்சியின் இளைஞர் பிரிவான, பா.ஜ., யுவ மோர்ச்சா சார்பில், 'நமோ நவ மத்தாதா' எனப்படும் இளம் வாக்காளர் தேசிய மாநாடு, புதுடில்லியில் நேற்று நடந்தது. இதை, கட்சித் தலைவர் நட்டா துவக்கி வைத்தார்.
வரும் தேர்தலில், எட்டு கோடிக்கு மேற்பட்ட முதல் முறை வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களை கட்சிக்கு ஈர்க்கும் வகையில், அடுத்தகட்டமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
உலக அளவில், இளம் வாக்காளர்களை ஈர்க்கும் பிரமாண்ட திட்டமாக இது அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்து வரும் நாட்களில், நாடு முழுதும் இளைஞர்களை சந்தித்து, பா.ஜ., அரசின் செயல்பாடுகள் குறித்தும், இளைஞர்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, ஒரு கோடி இளைஞர்களை சந்திக்க, நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் குறைந்தபட்சம், 2,000 முதல் முறை வாக்காளர்களை, பா.ஜ., யுவ மோர்ச்சா நிர்வாகிகள் சந்திப்பர்.
இந்த இயக்கத்தின் நிறைவாக, வரும், 24ம் தேதி நாடு முழுதும், 5,000 இடங்களில், இளம் வாக்காளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் பலர், பிரதமருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வாய்ப்பில்லை
இது குறித்து, பா.ஜ., யுவ மோர்ச்சா தலைவரும், எம்.பி.,யுமான தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:
கடந்த இரண்டு தேர்தல்களின் முடிவுகள், நம் நாட்டின் தலைவிதியை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இளைஞர் நலன் சார்ந்த பல திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறது.
அரசியலாக இருந்தாலும், அறிவியல், பொருளாதாரம் என, எந்தத் துறையாக இருந்தாலும், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
யுவ மோர்ச்சாவின் துணை தலைவரான நேகா ஜோஷி கூறியதாவது:
இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு, யுவ மோர்ச்சா நிர்வாகிகள் உதவுவர்.
முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் லஞ்ச, ஊழல்கள் குறித்து, இந்த இளம் வாக்காளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
நாட்டில், கடந்த 10ஆண்டுகளில் என்னென்ன முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து, இளைஞர்களுக்கு விளக்க உள்ளோம்.
மோடிக்கு முன், மோடிக்குப் பின் என்ற முறையில் இந்த பிரசார இயக்கம் இருக்கும். உதாரணமாக, 2014க்கு முன், நாளொன்றுக்கு, 12 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. அது தற்போது, 37 கி.மீ., ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல் முன்பு ஏழு எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் இருந்தன. முதல்முறையாக ஓட்டளிக்க உள்ள வாக்காளர்களின் காலத்தில் அது, 23ஆக உயர்ந்துள்ளது.
இதுபோன்ற முன்னேற்றங்கள், மாற்றங்கள், சர்வதேச அளவில் நம் நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமையை இளைஞர்களுக்கு தெரிவிக்க உள்ளோம். ஊழல் எவ்வாறு ஒழிக்கப்பட்டது என்பதையும் அவர்களுக்கு விளக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது சிறப்பு நிருபர் -.

