ம.பி. சட்டசபை தேர்தல் தோல்வி 150 நிர்வாகிகளை நீக்குகிறது காங்.
ம.பி. சட்டசபை தேர்தல் தோல்வி 150 நிர்வாகிகளை நீக்குகிறது காங்.
ADDED : ஜன 21, 2024 02:09 AM
போபால், மத்திய பிரதேச சட்ட சபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட, 150 நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விளக்கத்தில் திருப்தி இல்லை எனில், அவர்களை கட்சியை விட்டு நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 163 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
காங்கிரஸ், 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பின் கட்சியின் மாநில தலைவரான கமல்நாத் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு, தொகுதி வாரியாக கட்சிக்கும், கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராக செயல்பட்டவர்கள் பற்றிய புகார்களை பெற்றது.
இதன் அடிப்படையில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள் என, 150 நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இது பற்றி மத்திய பிரதேச காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அடுத்த 10 நாட்களுக்குள் அவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். அவர்களது பதில் திருப்தி அளிக்கவில்லை எனில், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

