தொட்டால் 35 துண்டுகளாக வெட்டுவேன்; முதலிரவில் 'ஷாக்' கொடுத்த புது மனைவி
தொட்டால் 35 துண்டுகளாக வெட்டுவேன்; முதலிரவில் 'ஷாக்' கொடுத்த புது மனைவி
ADDED : ஜூன் 26, 2025 01:05 AM

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தில் முதலிரவு அறைக்குள் நுழைந்த மனைவி, 'என்னை தொட்டால், 35 துண்டுகளாக வெட்டு வேன்' என கணவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் கேப்டன் நிஷாத், 26. இவருக்கும், கராச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சித்தாரா என்ற இளம்பெண்ணுக்கும் ஏப்., 29ல் திருமணம் நடந்தது. மே 2ம் தேதி, திருமண வரவேற்பு நடந்தது.
கொலை மிரட்டல்
விழாவுக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் சந்தோஷமாக இருந்தாலும், மணமகன் நிஷாத் முகத்தில் கவலை ரேகை ஓடியது. அது, புது மனைவியின் கொலை மிரட்டல் தான் என்பது, அவரைத் தவிர அங்கு வந்த யாருக்கும் தெரியவில்லை.
இந்த சூழலில், அடுத்த நாளே, தன் மனதில் உள்ள பயத்தை குடும்பத்தாரிடம் நிஷாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
திருமணமான அன்று முதலிரவில், முகத்தை மறைத்தபடி என் மனைவி அமர்ந்திருந்தார். அவர் கையில் கூர்மையான கத்தி ஒன்று இருந்தது. 'என்னை தொட்டால், உன்னை 35 துண்டுகளாக வெட்டு வேன். நான், காதலன் அமனுக்கு சொந்தமானவள்' என ஆவேசமாக அவர் மிரட்டினார்.
எனக்கு எதுவும் புரியவில்லை. நான் பயத்தில் அடங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தேன். நள்ளிரவில் அவர் துாங்கிய பின்னரே, நான் துாங்கினேன்.
கடந்த நான்கு நாட்களாக இந்த நிலை தான் நீடிக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது. இவ்வாறு நிஷாத் கூறினார்.
இதை கேட்டு கலவரமடைந்த நிஷாத் குடும்பத்தினர், சித்தாரா மற்றும் அவரின் குடும்பத்தினரை அழைத்து பேசினர்.
அப்போது சித்தாரா, 'கட்டாயப்படுத்தியதால் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்தேன். நான் அமன் என்பவரை காதலிக்கிறேன்.
இந்த உடல் அவருக்கு மட்டுமே சொந்தமானது' என வசனம் பேச, இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி, ஊர் தலைவர்கள் முன்னிலையில் சித்தாராவிடம் இரு குடும்பத்தினரும் சமாதானம் பேசினர். அமனை மறந்து நிஷாத்துடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட வற்புறுத்தினர். இது தொடர்பாக உடன்பாடு கடிதம் ஒன்றையும் அவரிடம் எழுதி வாங்கினர்.
மரண பயம்
இருப்பினும், கணவர் நிஷாத்தை மிரட்டுவதை சித்தாரா தொடர்ந்தார்; தன் காதலனுடன் அனுப்பி வைக்கும்படி மிரட்டினார். மரண பயத்துடனேயே பகலையும், இரவையும் நிஷாத் கழித்து வந்தார்.
இந்த சூழலில், கடந்த 30ம் தேதி, நிஷாத் வீட்டில் இருந்து சித்தாரா தப்பினார்.
வீட்டின் முன்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், பின்னால் உள்ள சுவர் ஏறி அவர் குதித்ததை, வீட்டின் 'சிசிடிவி' காட்சிகள் காட்டிக் கொடுத்தன.
இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பிறகே, வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.
இரு குடும்பத்தாரும் சமரசமாக செல்வதாக கூறியதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.