ஆபரேஷன் சிந்து நடவடிக்கை: இதுவரை 3154 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
ஆபரேஷன் சிந்து நடவடிக்கை: இதுவரை 3154 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
UPDATED : ஜூன் 26, 2025 03:53 AM
ADDED : ஜூன் 25, 2025 10:21 PM

டெஹ்ரான்: ஈரானில் இருந்து, 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை வாயிலாக இதுவரை, 3,154 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்தியத் துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் இன்று(ஜூன் 25) மஷாத்தில் இருந்து புதுடில்லிக்கு வந்த சிறப்பு விமானம் மூலம் 296 இந்தியர்களும், 4 நேபாள நாட்டவர்களும் ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஈரானில் இருந்து இதுவரை 3,154 இந்தியர்கள் தற்போது தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார்.
நிலைமை மோசம்
டில்லி திரும்பிய நேபாள நாட்டைச் சேர்ந்த சகால் கூறுகையில், 'நான் கடந்த 8 ஆண்டுகளாக ஈரானில் இருக்கிறேன். நிலைமை மோசமடைந்த பிறகு இந்திய தூதரகத்திலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.
திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அரசுக்கும், இந்திய தூதரகத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், என்றார்.
டில்லி திரும்பிய நேபாள நாட்டைச் சேர்ந்த காயத்ரி தாபா கூறுகையில், 'நான் கடந்த 10 ஆண்டுகளாக ஈரானில் இருக்கிறேன். இந்திய அரசு எங்களுக்கு நிறைய ஏற்பாடுகளைச் செய்தது. எங்களுக்கு நிறைய உதவியது, என்றார்.
மகிழ்ச்சி
டில்லி திரும்பிய நேபாள நாட்டைச் சேர்ந்த உத்சவ் தாபா கூறுகையில், 'நான் கடந்த 9 ஆண்டுகளாக ஈரானில் இருக்கிறேன். நான் என் நாட்டிற்குத் திரும்பிச் செல்லப் போகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய தூதரகம் எங்களுக்காக ஏற்பாடுகளைச் செய்தது. நான் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.