ADDED : ஜன 23, 2024 05:37 AM
பெங்களூரு: கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் அமைச்சர் சோமண்ணாவின் வீட்டுக்குச் சென்று, சிற்றுண்டி சாப்பிட்டார்.
சட்டசபை தேர்தலில், சாம்ராஜ்நகர், வருணா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோற்ற பின், பா.ஜ., மேலிடம் மீது சோமண்ணா எரிச்சலில் இருந்தார். தன் தோல்விக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை என, பகிரங்கமாகவே சாடினார்.
மேலிடத்தின் உத்தரவுக்குப் பணிந்த தனக்கு, மாநில தலைவர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்காததால் எரிச்சலில் இருந்தார். இவரை சமாதானம் செய்ய, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் முயற்சித்தார்.
ஆனால் முடியவில்லை. சமீபத்தில் சோமண்ணாவை சந்தித்தபோது, 'உங்கள் வீட்டுக்கு வருவேன்; என் தங்கை கையால் சமைத்த உணவை சாப்பிடுவேன்' என அசோக் கூறியிருந்தார்.
டில்லிக்குச் சென்று, பா.ஜ., மேலிடத்தை சந்தித்து பேசிய பின், சோமண்ணா சமாதானம் அடைந்தார். அசோக்குடன் நட்பு பாராட்டி, உணவுக்கு அழைத்திருந்தார்.
இதன்படி நேற்று காலை, பெங்களூரின், விஜயநகரில் உள்ள சோமண்ணாவின் வீட்டுக்கு, நேற்று காலை அசோக் சென்றிருந்தார். அவருடன் எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும் சென்றிருந்தார். சோமண்ணாவின் மனைவி தயாரித்த சிற்றுண்டியை சாப்பிட்டனர்.
அதன்பின் சோமண்ணா, அசோக், தேஜஸ்வி சூர்யா மூவரும் ஒன்றாகவே, ஆஞ்சனேயா கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

