தலைநகரில் நீடிக்கும் அடர்பனி: காற்றின் தரமும் மிக மோசம்
தலைநகரில் நீடிக்கும் அடர்பனி: காற்றின் தரமும் மிக மோசம்
ADDED : ஜன 23, 2024 11:01 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று வெப்பநிலை 6.9 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, சராசரியை விட குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டில்லியில் மாலையில் இருந்து அதிகாலை வரை மிக அடர்த்தியான மூடுபனி நிலவுகிறது.
ரயில்கள் தாமதம்
அண்டை மாநிலங்களில் நிலவும் மூடுபனி காரணமாக நேற்று 28 ரயில்கள் ஒரு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை தாமதமாக டில்லியை வந்தடைந்தன.
காலை 8:30 மணிக்கு சப்தர்ஜங்கில் பார்வைத் திறன் 200 மீட்டராகவும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 50 மீட்டராகவும் பதிவாகி இருந்தது.
காலை 9:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 376ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 97 சதவீதமாக பதிவாகியிருந்தது.
பஞ்சாப், ஹரியானா
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடுங்குளிர் தொடர்கிறது. பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட மிகக்குறைவாகவே நீடிக்கிறது.
எலும்பை உறைய வைக்கும் ஹரியானாவின் கர்னால் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. பதேஹாபாத் - 4.6, அம்பாலா - 4.6, பிவானி - 4.8, சிர்சா - 5.4, ஹிசார் மற்றும் நர்னால் தலா 6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரியாக இருந்தது.
பஞ்சாம் மாநிலத்தில் மிகவும் குளிரான நகரமாக, பாட்டியாலா விளங்குகிறது. இங்கு நேற்று முன் தினம் இரவு வெப்பநிலை 3.6 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
உறைபனியின் தத்தளிக்கும் குர்தாஸ்பூர் - 4, பதிண்டா - 4.2, பரித்கோட் - 5.2, அமிர்தசரஸ் - 6.7, லுாதியானா - 6.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகியவற்றில் மூன்று வாரங்களாக கடுங்குளிர் சற்றும் குறையவில்லை. சில நாட்களாக மேலும் அதிகரித்து வருவதால், மக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
ராஜஸ்தான்
மாநிலம் முழுதும் அடர்ந்த மூடுபனி தொடர்கிறது. கடுங்குளிரில் சிக்கித் தவிக்கும் ஆல்வார் நகரில் 2.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ராஜஸ்தானின் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சில இடங்களில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் கடுங்குளிர் நிலவுகிறது.
சுரு - 4.2, பில்வாரா - 4.8, பிலானி - 5.2, சித்தோர்கர் மற்றும் சங்கரியா - 5.5, ஜிநகர் -5.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
அடுத்த நான்கு நாட்களில் இதே கடுங்குளிர் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேநேரத்தில் வெப்பநிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசம்
இங்கு, நாளை முதல் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
உயரமான மலைப் பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் 26, 27 தேதிகளில் லேசான மழை பெய்யவும், 28ல் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை மாநிலம் முழுதும் 0.1 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது.
சிம்லாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. தர்மசாலா - 4.4, மணாலி - மைனஸ் 0.7, குப்ரி - 0.1, மண்டி - 0.2, குகும்சேரி - மைனஸ் 8.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. கடும் உறைபனி நிலவுவதால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீரிலும் கடுங்குளிர் தொடருகிறது. ஸ்ரீநகரில் நேற்று முன் தினம் இரவு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 5.0 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
இதுவே, முதல்நாள் இரவு மைனஸ் 5.3 டிகிரியாக இருந்தது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் நகரில் மைனஸ் 6.2 டிகிரி செல்ஷியஸ், காசிகுண்ட் - மைனஸ் 4.8, வடக்கு காஷ்மீரின் ஸ்கை ரிசார்ட் நகரான குல்மார்க் - மைனஸ் 4.5, கோகர்நாக் - மைனஸ் 1.5, குப்வாரா - மைனஸ் 4.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

