பிரதமர் மோடி இன்று வருகை; பெங்களூரில் உச்சகட்ட உஷார்
பிரதமர் மோடி இன்று வருகை; பெங்களூரில் உச்சகட்ட உஷார்
ADDED : ஜன 19, 2024 12:42 AM

பெங்களூரு : அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி இன்று(ஜன.,19) பெங்களூரு வருவதால், உச்சகட்ட பாதுகாப்பு போடபட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு பி.மாரேனஹள்ளியில் விண்வெளி பூங்காவில், போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை துவக்கி வைப்பதற்காக, ஒரு நாள் அரசு முறை பயணமாக, இன்று மதியம் 2:10 மணிக்கு, டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு வருகிறார்.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உட்பட முக்கிய பிரமுகர்கள், பிரதமரை வரவேற்க உள்ளனர். அங்கிருந்து கார் மூலம், நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வருகிறார். போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மையத்தையும்; விண்வெளி துறையில் பெண்கள் மேம்பாடு குறித்த போயிங் சுகன்யா திட்டத்தையும் மோடி துவக்கி வைக்கிறார்.
அங்கு நடக்கும் பொது கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை புறப்பட்டு செல்கிறார்.
நிகழ்ச்சியை ஒட்டி, பிரதமர் பயணம் செய்யும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் கர்நாடகா தொழில் மேம்பாட்டு வாரிய வளாகத்தில், 5 கி.மீ., சுற்றளவுக்கு இன்று மாலை நிகழ்ச்சி முடியும் வரை ட்ரோன்கள், பலுான்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தடை விதித்துள்ளார்.

