ADDED : ஜூன் 17, 2025 03:33 AM

துவக்கக்கல்வி, தாய்மொழி வாயிலாக கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, 2020ல் பரிந்துரைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அந்த பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டதும் பாராட்டுதலுக்கு உரியது.
ஏனென்றால், தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும், எந்த வயதிலும் நாம் கற்றுக் கொள்ள முடியும். மொழி என்பது தொடர்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நமக்கு தெரிந்த மொழியில் கற்றல் இருந்தால் மட்டுமே அது முழுமை பெறுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, இந்திய கல்வி நிலையங்களில் ஆங்கிலம் ஒரு பயன்பாட்டு மொழியாக இருந்து வருகிறது. ஆங்கிலேயர்கள், அவர்கள் தங்கியிருந்த காலத்தில், உள்ளூர் மக்களுடன் எளிதாக தொடர்பு கொள்வதற்காக, பள்ளிகளில் மொழியை அறிமுகப்படுத்தினர்.
உரையாடலின்போது, உள்ளூர் மக்களை பதில்அளிக்க வைப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. இன்றோ, தேர்ச்சி ஒன்றை மட்டுமே நோக்கமாக வைத்து ஆங்கில மொழி பயன்பாடு உள்ளது.
வீட்டில் தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள், அவர் சொல்லித் தரும் பிறமொழி பக்திப் பாடல்களை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், எளிதில் அதை கற்றுக்கொள்கின்றனர். அதுபோலத்தான், ஆங்கில மொழி புரியாவிட்டாலும், ஆசிரியர்கள் சொல்வதை வைத்து, மனதில் ஏற்றிக்கொண்டு இறுதித்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர்.
தாய்மொழி தவிர பிற பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றவற்றை புரியாமல் மனப்பாடம் செய்யும் நிலைதான் துவக்கக்கல்வியில் நீடிக்கிறது. தாய்மொழியில் இல்லாததால், அந்த பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் அவதிப்படுவதுடன், கற்றல் குறைபாடும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
கற்றலில் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. பயிற்றுவிக்கப்படும் மொழியை புரிந்துகொள்ளாமல் கற்றல் சாத்தியமில்லை. ஒரு தனிமனிதனின் கற்றல் என்பது அறிவை சார்ந்தே உள்ளது.
தான் கற்கும் கல்வியை புரிந்துகொண்டு, தன் ஆற்றல் அறிவை அவன் வளர்த்துக் கொள்கிறான். அதேசமயம், தான் கற்று தேர்ந்ததை பிறருக்கு சொல்லித் தருகிறான்.
இவை அனைத்திற்கும் அடிப்படையாக தாய்மொழி இருக்கிறது. ஒரு மனிதனின் அறிவு பெருக்கம் என்பது அவனுடைய 6 முதல் 10 வயது வரை நிகழ்கிறது. முதன்மை ஆண்டுகள் என குறிப்பிடப்படும் இந்த வயதிற்கான காலம் துவக்கக் கல்வியை ஒட்டியுள்ளது.
துவக்கக்கல்வியில் பெற்ற கற்றல் திறனை மேலும் விரிவுபடுத்த நடுநிலைப்பள்ளி கல்வி உதவுகிறது. இந்த திறன்களில் தேர்ச்சி பெற்ற ஒருவர், அதை உயர்நிலைப்பள்ளிகளில் பயன்படுத்துகிறார். துவக்கம், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கற்ற அனுபவத்தை வைத்து, தன் செயல்திறனை வளர்த்துக் கொள்கிறார்.
இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது கற்றல் மொழி. துவக்கப்பள்ளியில் தேர்ந்தெடுக்கும் கற்றல் மொழியே, அடுத்தடுத்த காலகட்டங்களில் பாடங்களை புரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் உதவுகிறது.
அவ்வாறு, உரிய கற்றல் மொழித்திறன் இல்லாதபோது, உயர்நிலைக் கல்வி வரை ஒரு மாணவர் கற்ற கல்வி ஒருபோதும் பயன் தராது. அதன் வாயிலாக, திரட்டப்பட்ட கல்வி அறிவும் முழுமை பெறாது. ஆனால், அடிப்படை யதார்த்தங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத ஆங்கில மொழி, துவக்கக் கல்வியில் பயிற்று மொழியாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு மொழியை குறைபாடற்ற முறையில் கற்கவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
குறிப்பாக வீடுகள் மற்றும் குடும்ப வட்டாரங்களில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அதை பயன்படுத்த அவர்களுக்கு சந்தர்ப்பங்களும் இல்லை.
தமிழகம் போன்ற மாநிலங்களில் கிராமப்புறங்களில் கூட, தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவது கவலை அளிக்கிறது. தாய்மொழி கல்வி தரும் நன்மை குறித்த அடிப்படை புரிதல்கூட அவர்களிடம் இல்லை.
ஒரு நபர், துவக்கக்கல்வியில் அதிகபட்சமாக பயனடைய, வகுப்பறையில் பயன்படுத்தப்படும் மொழி மிகவும் அவசியமானது. வகுப்பறைகளில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் ஆங்கில மொழி, ஒரு குழந்தை பிறந்தது முதலே கூட வருவது அல்ல.
தாய்மொழி வாயிலாக அல்லாமல், ஆங்கிலம் வாயிலாக கற்பிக்கப்படுவதால், துவக்கக்கல்வி மாணவர்கள் எண்ணற்ற சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் நமக்கு என்ன கற்றுத் தருகிறது என்பதைக் கூட அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை.
தாய்மொழி வாயிலாக சொல்லித் தராவிட்டால், அந்த பாடங்களில் என்ன உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது சாத்தியமில்லை.
எனவே, துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல் முறை, அவரவர் தாய்மொழியில் இருத்தல் அவசியம். அப்போதுதான், பிற்காலங்களிலும் அவர்கள் கற்ற கல்வி, வாழ்நாள் முழுதும் உறுதுணையாக இருக்கும்.
ஆகையால், தேசிய கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரைப்படி, துவக்கப் பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி அவசியம் என்ற சி.பி.எஸ்.இ.,யின் முடிவு வரவேற்கத்தக்கது. அதை அனைவரும் பின்பற்றினால், மாணவர்களின் கல்வியறிவு செழுமையடையும்.
- நாதன் சம்பந்தம் -
கல்வித்துறை ஆலோசகர்