ADDED : ஜன 13, 2024 11:11 PM

கொப்பால்: வரும் லோக்சபா தேர்தலில், கொப்பால் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் இருந்து போட்டியிட வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுலையும், அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்காவையும், கர்நாடகா காங்கிரசார் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் சிக்கமகளூரில் இருந்து இந்திராவும், பல்லாரியில் இருந்து சோனியாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் ராகுல், பிரியங்காவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் கொப்பால் தொகுதியில் இருந்து, பிரியங்கா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொப்பால் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு சிந்தனுார், மஸ்கி, குஷ்டகி, கனககிரி, கங்காவதி, எலபுர்கா, கொப்பால், சிருகுப்பா என்று, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இவற்றில் ஆறு தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால், கொப்பாலில் போட்டியிட்டால், பிரியங்கா எளிதாக வெற்றி பெறலாம் என, மாநில தலைவர்கள் கணக்கு போடுகின்றனர். பிரியங்கா இதுவரை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதே இல்லை.
கடந்த 2019 தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. முதன்முறை தேர்தலில் போட்டியிட உள்ள அவரை, எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று, காங்கிரசார் நினைத்துள்ளனர்.
இதனால், கொப்பாலை பாதுகாப்பான தொகுதியாக தேர்வு செய்து உள்ளனர். இங்கிருந்து பிரியங்கா போட்டியிடுவாரா என்பது, இன்னும் ஒரு சில மாதங்களில் தெரிந்துவிடும்.

