ADDED : ஜன 19, 2024 12:42 AM
பெங்களூரு : ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 6.27 லட்சம் பயணியரிடம் இருந்து, தென்மேற்கு ரயில்வே 46.31 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு துறை அதிகாரி மஞ்சுநாத் கனமடி வெளியிட்ட அறிக்கை:
நடப்பு நிதியாண்டில், 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 6,27,014 பயணியர் டிக்கெட் இன்றி ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, மொத்தம் 46.31 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு பிரிவில் மட்டுமே, 3,68,205 பேர் டிக்கெட் இன்றி பயணம் செய்துள்ளனர். 28.26 கோடி ரூபாய் அபராதம் வசூலித்தது அதில் அடங்கும்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில், 9.95 சதவீதம் பேர், கூடுதலாக பயணம் செய்துள்ளனர். தென்மேற்கு ரயில்வே மண்டலம் ஆரம்பித்த பின், முதல் முறையாக அதிகபட்ச அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
பயணியர் வசதியுடன் பயணம் செய்யும் வகையிலும், டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

