ராம் நகரில் 20 ஏக்கரில் ராமர் கோவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அறிவிப்பு
ராம் நகரில் 20 ஏக்கரில் ராமர் கோவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அறிவிப்பு
ADDED : ஜன 13, 2024 11:18 PM

ராம் நகர்: ''ராம்நகரில் 20 ஏக்கரில் ராமர் கோவில் கட்டுவோம்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.
ராம்நகர் மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா நேற்று அளித்த பேட்டி:
வருகிற 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில், திறப்பு விழாவிற்குச் செல்வது இல்லை என்று, எங்கள் கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். இது சரியான முடிவு தான். ராமர் கோவில் திறப்பில், பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர். ராமர் பா.ஜ., - காங்கிரஸ் கட்சியின் சொத்து இல்லை. மக்களின் சொத்து. பா.ஜ.,வினர் மட்டுமே ராம பக்தர்கள் இல்லை. நாங்களும் ராம பக்தர்கள் தான்.
ராம்நகரில் ராமர் கோவில் கட்ட முடிவு செய்தோம். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. ராம்நகரில் 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளோம். லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில், குமாரசாமி போட்டியிடுவாரா என்று எனக்கு தெரியாது.
துணை முதல்வர் சிவகுமார், சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இப்படி இருக்கும்போது, ஜாதிகள் அடிப்படையில் கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க கோரி, மூத்த அமைச்சர்கள் கேட்பது சரியல்ல. கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் மூலம், சிவகுமாரை கட்டி போடலாம் என்று நினைத்தால், அது கண்டிப்பாக நடக்காது. அவருக்கு என்று சக்தி உள்ளது.
கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்கக்கோரி கேட்கும், மூத்த அமைச்சர்களிடம் லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளின் பொறுப்பை, கட்சி மேலிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அவர் கேட்கும்படி கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

