ADDED : ஜன 23, 2024 05:55 AM
மாண்டியா: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பிக்கும் வகையில், வீடொன்றில் ராமர் புத்தகங்கள், நாணயங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாண்டியா, பாண்டவபுராவின், ஹரளஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் அங்கேகவுடா. இவர் புத்தகங்கள் சேகரிப்பதில், ஆர்வம் கொண்டவர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து, 'லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பிக்கும் நோக்கில், தன் வீட்டின் ஒரு அறையில் ராமர் சம்பந்தப்பட்ட புத்தகம் மற்றும் நாணயங்கள் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளார். ஒரு வாரம் வரை கண்காட்சி இருக்கும்.
கண்காட்சியில் 'வால்மீகி நாராயணா, துளசி ராமாயணா, ஜனபதா ராமாயணா, குவெம்புவின் ஸ்ரீராமாயண தரிசனம், பால ராமாயணா, சுந்தர காண்டம்' உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழியில் உள்ள ராமாயண புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீராமன் பட்டாபிஷேகம், ராம ராவணன் யுத்தம், ஹனுமன் சஞ்சீவினி மலையை சுமந்து வரும் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ராமன் சம்பந்தப்பட்ட நாணயங்களும் கண்காட்சியில் உள்ளன. 1600, 1700, 1818ம் ஆண்டின் நாணயங்களை இங்கு காணலாம். ஈஸ்ட் இந்தியா கம்பெனி வெளியிட்ட நாணயங்கள், ராமர், சீதை, லட்சுமனனுடன், ஹனுமன் உள்ள 50 நாணயங்கள் உள்ளன.
அங்கே கவுடா கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்துள்ளேன். தற்போது அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடப்பதை ஒட்டி, என் வீட்டில் புத்தகங்கள், ஓவியங்கள், நாணங்களை தனித்தனி அறையில், கண்காட்சிக்கு வைத்துள்ளோம்.
ராம பக்தர்கள், வரலாற்று வல்லுனர்கள், வாசகர்கள், மாணவர்கள் உட்பட, ஆர்வம் உள்ளவர்கள் கண்காட்சிக்கு வரலாம். ஒரு வாரம் வரை கண்காட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

