குக்கர் வெடிகுண்டால் பாதித்தவருக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி
குக்கர் வெடிகுண்டால் பாதித்தவருக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி
ADDED : ஜன 19, 2024 12:35 AM

தட்சிண கன்னடா : மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனருக்கு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில், கடந்த 2022 நவம்பர் 19 ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில், ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் பூஜாரி, குற்றம் சாட்டப்பட்ட ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தற்போது ஷாரிக், தேசிய புலனாய்வு அமைப்பினர் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போதைய பா.ஜ., அரசு, அவருக்கு இழப்பீடு வழங்கும் என அறிவித்தது.
இதற்கிடையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வேதவியாஸ் காமத், புருஷோத்தம் பூஜாரிக்கு, தனது சொந்த செலவில் புதிய ஆட்டோவும் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அரசு அறிவித்த நிவாரண தொகை மட்டும் வரவில்லை.
இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து புருஷோத்தம் பூஜாரிக்கு, மாவட்ட கலெக்டர் சந்தோஷ் குமார், 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று முன்தினம் வழங்கினார்.

