கர்நாடகாவில் 8 அதிகாரிகள் வீடுகளில் ரூ.35 கோடி பறிமுதல்
கர்நாடகாவில் 8 அதிகாரிகள் வீடுகளில் ரூ.35 கோடி பறிமுதல்
UPDATED : ஜூன் 25, 2025 10:00 AM
ADDED : ஜூன் 25, 2025 04:00 AM

பெங்களூரு: கர்நாடகாவில் எட்டு அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 35 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசின் பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது பற்றி, லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு கோவிந்தராஜ நகர் மாநகராட்சி அலுவலக உதவி இன்ஜினியர் பிரகாஷ், ஷிவமொக்கா இயற்கை விவசாய துறை ஆராய்ச்சி இயக்குநர் பிரதீப், சிக்கமகளூரு டவுன் நகரசபை கணக்கு அதிகாரி லதா மணி உள்ளிட்ட எட்டு அதிகாரிகள் வீடுகளில், நேற்று காலை 7:00 மணி முதல் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
![]() |
மாலை 5:00 மணியுடன் சோதனை முடிந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்யும் பணி நடந்தது.
இதில், எட்டு அதிகாரிகளிடமும் தங்கம், வெள்ளி நகைகள், சொகுசு கார்கள், வீட்டு மனைகள் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் என, 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.