பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணியக் கூடியவர் அல்ல; ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணியக் கூடியவர் அல்ல; ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
UPDATED : டிச 04, 2025 07:37 PM
ADDED : டிச 04, 2025 03:30 PM

புதுடில்லி: பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணியக்கூடியவர் அல்ல என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இன்றைய இந்திய பயணம் குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, ரஷ்ய அதிபர் புடின் அளித்த பிரத்யேக பேட்டி: இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகம் கண்டுள்ளது. இந்திய தலைமையை பற்றி நாடு பெருமை கொள்கிறது. பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணிய கூடியவர் அல்ல. நண்பர் மோடியை சந்திக்க பயணம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா- ரஷ்யா உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க நிறைய இருக்கிறது.
இந்தியா மிக குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் போது, பிரதமர் மோடியும், நானும் ஒரே காரில் பயணம் செய்தது தற்செயலாக நடந்தது. இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. நாங்கள் வெளியே வந்தோம். என் கார் அங்கே இருந்தது. நானும், எனது நண்பரும் ஒரே காரில் பயணம் செய்தோம். நாங்கள் பயணம் முழுவதும் பேசினோம்.
மாநாடு நடக்கும் இடத்திற்கு கார் வந்த பிறகும், நாங்கள் காருக்குள் சிறிது நேரம் அமர்ந்து ஆலோசனை நடத்தினோம். இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியுடன் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட ஒரு சிறந்த நாடு. இது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒரு சாதனை. விண்வெளி ஆய்வு, அணுசக்தி, கப்பல் கட்டுமானம் மற்றும் விமான உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.
டில்லி வந்த ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

