ADDED : ஜன 19, 2024 12:38 AM

பெங்களூரு : ''கருக்கலைப்பை தடுக்க, மாநில அளவில் தனிப்படை அமைக்கப்படும்,'' என்று, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
மாண்டியா, பெங்களூரு ரூரலில் நடந்த, சட்டவிரோத கருக்கலைப்பு மாநில அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இந்த விஷயத்தில் சுகாதாரத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கருக்கலைப்பை தடுக்க, ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்த குழுவுடன் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரில் உள்ள தன் அலுவலகத்தில், நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
சட்டவிரோத கருக்கலைப்பை தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு, சுகாதாரத் துறை தயாராக உள்ளது.
இதற்காக மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதார துறை அதிகாரிகள் அடங்கிய, தனிப்படை அமைக்கப்படும்.
தாலுகா அளவில் சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில், தனிப்படை அமைப்போம்.
இவர்கள் பாதுகாப்புக்காக, போலீசாரை நியமிப்பது குறித்து, உள்துறைக்கு கடிதம் எழுதுவோம். கருக்கலைப்பு தடுப்பு குழுவில், பெண் எம்.எல்.ஏ.,க்கள் ரூபகலா, நயனா, லதா மல்லிகார்ஜுன், சுகாதார அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடுபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து, கூட்டத்தில் ஆலோசித்தோம். இதுதொடர்பாக அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

