சோமண்ணாவுக்கு அமித் ஷா புத்திமதி: நல்ல பதவி கிடைக்கும் என ஊக்கம்
சோமண்ணாவுக்கு அமித் ஷா புத்திமதி: நல்ல பதவி கிடைக்கும் என ஊக்கம்
ADDED : ஜன 13, 2024 11:24 PM

அதிருப்தியில் இருக்கும் பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணாவிடம், “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்திமதி கூறி, ஊக்கமும் அளித்து உள்ளார்.
பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், கட்சி மேலிடம் கூறியதால் தனது கோவிந்தராஜ்நகர் தொகுதியை விட்டுக்கொடுத்தார். வேறு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் தோற்றார். தனது தோல்விக்கு கட்சியின் தலைவர்களை காரணம் என்று குற்றம்சாட்டினார்.
கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருந்தார். அவரை காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்தன. இதுபற்றி அறிந்த பா.ஜ., மேலிடம், டில்லி வரும்படி, சோமண்ணாவுக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி நேற்று முன்தினம் அவர் டில்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, சோமண்ணா முதலில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். தனது தோல்விக்கு, கட்சியின் முக்கிய தலைவர்கள் தான் காரணம் என்று, புலம்பித் தள்ளினார். ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி.,யாக தன்னைத் தேர்வு செய்ய வேண்டும் என்று, அமித்ஷாவிடம் கேட்டு உள்ளார்.
ஆனால் லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, சோமண்ணாவை, அமித்ஷா அறிவுறுத்தினார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று, அறிவுரை கூறியதுடன், நல்ல பதவி கிடைக்கும் என்று ஊக்கம் அளித்து, சோமண்ணாவை, அமித்ஷா அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சோமண்ணா அளித்த பேட்டியில், ''உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது, மனநிறைவு தருகிறது.
அவரிடம் எனது வலி, வேதனைகளை கூறினேன். நான் சில முக்கியமான விஷயங்களை அவரிடம் கூறினேன். அதுபற்றி வெளிப்படையாக பேச முடியாது. கட்சிக்கு உங்கள் சேவை வேண்டும் என்று கூறினார்,'' என்றார்.

