ADDED : ஜன 23, 2024 05:38 AM

பெங்களூரு; மாநில பா.ஜ., தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும், அவருக்கு மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஷோபா, வாழ்த்து கூறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேலாக, மாநில பா.ஜ.,வுக்கு தலைவர், எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காமல் மேலிடம் காலம் கடத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலாக விமர்சித்தனர். அதன்பின் விஜயேந்திராவை, மாநில தலைவராகவும், அசோக்கை எதிர்க்கட்சி தலைவராகவும் பா.ஜ., மேலிடம் நியமித்தது.
மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, முன்னாள் அமைச்சர்கள் ரவி, அரவிந்த் லிம்பாவளி, சோமண்ணா, பசன கவுடா பாட்டீல் எத்னால் உட்பட, பல தலைவர்கள் மாநில தலைவர் பதவி மீது கண் வைத்திருந்தனர். ஆனால் விஜயேந்திரா நியமிக்கப்பட்டதால், பலரும் எரிச்சலடைந்தனர்.
எத்னால், சோமண்ணா பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்தனர். கட்சி மேலிடம் தலையிட்டு, கட்டுப்படுத்திய பின் மவுனமாகினர். சிலர் பெயரளவில் மட்டும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
மாநில பா.ஜ., தலைவராக விஜயேந்திரா நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களாகியும் அவருக்கு மத்திய அமைச்சர் ஷோபா வாழ்த்து கூறவில்லை. கட்சி தலைவருக்கு குறைந்தபட்சம் 'எக்ஸ்' சமூக வலைதளத்திலும் வாழ்த்து கூறவில்லை. கட்சி அலுவலகத்துக்கும் வரவில்லை.
சமீபத்தில் ஷோபாவும், விஜயேந்திராவும் ஒரே விமானத்தில் மங்களூருக்கு சென்றனர். ஆனால் இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்ளவில்லை.
கட்சி சார்பில் நடந்த கூட்டங்களிலும், ஷோபா பங்கேற்கவில்லை. வெவ்வேறு மாவட்ட பிரிவுகளின் தலைவர்கள் கூட்டம், லோக்சபா தொகுதிகளின் ஏற்பாடு குறித்து நடந்த கூட்டத்திலும் கூட, தன் தொகுதி சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிவிக்க, கூட்டத்துக்கு வரவில்லை.
இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில், ஷோபா தொகுதி மாற்றி போட்டியிட வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், கட்சியின் மாநில தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தும் சம்பிரதாயம் கட்சியில் உள்ளது. இதை ஷோபா பின்பற்றுவாரா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

