ADDED : பிப் 01, 2024 11:11 PM

பெங்களூரு: ''மாண்டியா தொகுதி 'சீட்' வாங்குவதற்காக, கெரேகோடு பிரச்னையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக, எம்.பி., சுமலதா பேசி வருகிறார்,'' என, அமைச்சர் செலுவராயசாமி கூறி உள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியினர் ஹிந்துக்களுக்கோ, எந்த கொடிக்கோ எதிரானவர்கள் இல்லை.
கெரேகோடு கிராமத்தில் தேசியக் கொடி ஏற்ற அனுமதி வாங்கிவிட்டு, ஹனுமன் உருவம் பொறித்த கொடியை பறக்கவிட்டு உள்ளனர்.
கெரேகோடு கிராமத்தில், அமைதியை நிலைநாட்ட ஊர் தலைவர்களிடம் பேச தயாராக உள்ளோம்.
பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மக்களை துாண்டி விடுகின்றனர். முன்னாள் முதல்வர் குமாரசாமியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் தீ மூட்டும் வேலையை செய்கின்றனர்.
யார் என்ன செய்கின்றனர் என்று, மாண்டியா மக்கள் அறிவர்.
கெரேகோடு பிரச்னையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக, மாண்டியா எம்.பி., சுமலதா, சில கருத்துகளை பேசி உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதி பா.ஜ., 'சீட்' எதிர்பார்க்கிறார். இதற்காக பா.ஜ.,விற்கு ஆதரவாக பேசி வருகிறார்.
தேவகவுடாவிடம் அரசியல் கற்றுக் கொண்டு, அவருக்கு எதிராக பேசுவதாக, என் மீது முன்னாள் எம்.பி., புட்டராஜு குற்றஞ்சாட்டி உள்ளார். மாண்டியாவுக்கு தேவகவுடா அளித்த பங்களிப்பு என்ன என்பதை, புட்டராஜு தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

