ADDED : ஜன 24, 2024 05:49 AM

பெலகாவி : ஜே.சி.பி.,யில் சிக்கிக் காயமடைந்த நாகப்பாம்புக்கு, சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பெலகாவி புறநகரில், நேற்று முன் தினம் காலை, நிலத்தில் மண்ணை தோண்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஜே.சி.பி., அடியில் சிக்கி நாகப்பாம்பு காயமடைந்தது. இதுகுறித்து பாம்பு வல்லுனர் கேத்தன் ஜெவந்த் ராஜேவுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த அவர், பாம்பை மீட்டு பெட்டியில் வைத்து, பெலகாவியின் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஜே.சி.பி.,யின் கூர்மையான பகுதி குத்தியதில், பாம்பின் கழுத்தின் கீழ்ப்பகுதி உட்பட, பல இடங்களில் துண்டாகியிருந்தது.
டாக்டர் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து, துண்டான பகுதிகளை இணைத்தார். 40 தையல் போடப்பட்டது.
மருத்துவமனை தலைமை அதிகாரி சன்னக்கி கூறியதாவது:
முதன் முறையாக, விஷம் நிறைந்த பாம்புக்கு, இத்தகைய அதிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்துள்ளோம். வயலில் மண்ணை தோண்டும்போது, ஜே.சி.பி., இயந்திரத்தின் கூர்மையான பகுதி குத்தியதில், பாம்பின் தோள், முதுகு எலும்புகள் துண்டானது.
பாம்புக்கு மயக்க மருந்து கொடுத்த பின், காயங்களை கழுவி, சிகிச்சையளித்து தையல் போட்டுள்ளோம். துண்டான பகுதிகளை இணைத்தோம். பாம்பு குணமடைய சரியான பராமரிப்பு, உணவு, பராமரிப்பு அவசியம். குணமடையும் என, நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

