!பயங்கரவாதிகள் எட்டு பேருக்கு குற்றப்பத்திரிகை: பெங்களூரில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டவர்கள்
!பயங்கரவாதிகள் எட்டு பேருக்கு குற்றப்பத்திரிகை: பெங்களூரில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டவர்கள்
ADDED : ஜன 13, 2024 11:27 PM
பெங்களூரு: பெங்களூரில் குண்டுவெடிப்பு நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக கைதான லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் எட்டு பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு, ஆர்.டி., நகர் சுல்தான்பாளையாவில் உள்ள, வாடகை வீட்டில் சந்தேகப்படும்படியாக வசித்த ஐந்து பேரை, கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஏழு நாட்டு துப்பாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள், வாக்கி டாக்கிகள், 12 மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர்கள் ஐந்து பேரும் சுல்தான்பாளையாவின் சையது சுகைல் கான், 24, கொடிகேஹள்ளியின் முகமது உமர், 29, பந்தரப்பா லே - அவுட்டின் ஜாகித் தப்ரேஸ், 25, தின்னுாரின் சையது முதாசீர் பாஷா, 28, புலிகேசி நகரின் முகமது பைசல், 30 என்பதும், இவர்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
என்.ஐ.ஏ., விசாரணை
இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாக்கி டாக்கிகள், குண்டுவெடிப்பை நிகழ்த்த பயன்படுத்தப்படும் ரிமோட் என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதாவது பெங்களூரில் 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, கேரளாவின் நசீர் என்பவரின் கூட்டாளிகள் தான், இவர்கள் ஐந்து பேர் என்பது தெரிந்தது.
நசீர் கூறியதால் பெங்களூரில் பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறையில் உள்ள நசீரை, காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இவர்களின் கூட்டாளிகளான ஜுனைத் அகமது, சல்மான் கான் ஆகியோருக்கும், சதித்திட்டம் தீட்டியதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை கைது செய்ய, சர்வதேச போலீசாரின் உதவியையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நாடி உள்ளனர்.
தாக்குதல்
இந்நிலையில், எட்டு பேர் மீதும், பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:
குண்டுவெடிப்பு வழக்குகளில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் நசீர், மற்ற 7 பேரையும் பயங்கரவாதத்தில் ஈடுபடும்படி, மூளைச்சலவை செய்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிறைக்கு வந்த 7 பேருக்கும் சிறையில் வைத்தே, பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த பயிற்சி அளித்ததும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் பயிற்சி அளித்துள்ளார்.
பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற நசீர் கூறியதால், மற்ற 7 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து, நிதி உதவி கிடைத்து உள்ளது. போலீசார் தொப்பியை திருடி, அந்த தொப்பியை அணிந்து, பயங்கரவாத செயலில் ஈடுபட, சதி திட்டம் தீட்டி இருந்தனர். பல இடங்களில் வன்முறைகளை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

