ADDED : ஜன 21, 2024 12:24 AM
கிம்பள உயர்வு?
காக்கி சட்டைக்காரர்கள் குற்றங்களை தடுக்க, சாலை பாதுகாப்பை உணர்த்த ஒரு மாதத் திற்கு மேலாக பல இடங்களில், கூட்டங்களை நடத்தினாங்க.
அனுமதி இல்லாமல், சமையல் 'காஸ்' பில்லிங் வியாபாரத்தை குடியிருப்பு பகுதிகளில் நடத்தினாங்களே இது காக்கிகாரர்கள் பார்வையில் படலையோ. ஏற்கனவே ஆ.பேட்டையில், காஸ் சிலிண்டர் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தியதை பலபேருக்கு தெரிந்தும், சட்ட விரோதமாக காஸ் பில்லிங் வியாபாரத்தை குடியிருப்புகள் பகுதியில் நடத்தி வராங்க.
ஆபத்து ஏற்பட்ட பிறகு வழக்கு போட ஓடி வருவாங்களா. சட்ட விரோதமாக விற்பனை செய்ய மாதந்தோறும் 10 கே லஞ்சம் வாங்கினவங்க, அதனை 18 கேவாக உயர்த்திட்டாங்களாம்.
சம்பள உயர்வு போல சிலர் கிம்பள உயர்வு செய்றாங்களே. இதெல்லாம் பெர்ய்ய ஓபிசர்களுக்கு தெரியாமலா நடக்குது. அதிலும் சேர வேண்டியவங்களுக்கு போய் சேர்ந்தால் எப்புடி கண்டுக்குவாங்க.
பள்ளி மைதானம் எங்கே?
அறிவுக் கண்ணைத் திறக்கிற இடம் தானே சிறந்த கோவில். அந்த கோவில் தானே கல்வி தரும் பள்ளி. அத்தகைய புனிதமா இருக்க வேண்டிய ரா.பேட்டை, இருதய புரம் பகுதியின் கவர்மென்ட் பள்ளியின் மைதானத்தை ஜல்லி கற்கள் கொட்டி வைக்கிற குடோனாக மாற்றி இருக்காங்க.
இதனால், பள்ளி மாணவர்கள் விளையாட இடமே இல்லாமல் ஆக்கிட்டாங்க. சாலைப் பணியை செய்றவங்களுக்கு ஜல்லி, தார் டிரம்களை வைக்க வேறு இடமா கிடைக்கல. இதை எப்படி வட்டார கல்வித்துறை கண்டும் காணாமல் இருக்குதோ.
ஏற்கனவே அந்த பள்ளி மைதானத்தை இரவோடு இரவாக சப்டி காம்பவுண்ட் அமைத்து சிலர் சொந்தம் கொண்டாடினாங்க. அதனை மாவட்ட நிர்வாக உத்தரவில் துவம்சம் ஆக்கினாங்க. பள்ளி மைதானம் என்பதால் இப்படி பாழ்படுத்துற ஜனங்கள சட்டம் அதன் கடமையை செய்யுமா.
இடம் மாறியதா முனிசி., ஆபீஸ்?
இரண்டரை ஆண்டுகள் பதவிக்கால, இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் 8 மாதம் ஓவர். அதுக்கு அப்புறம் தேர்தல் அறிவித்து, தலைவரை தேர்ந்தெடுத்தாலும் இரண்டரை ஆண்டுகள் என்பதில் இருந்து, ஒன்றரை ஆண்டுகளாக தலைவர் பதவிக்கு ஆயுள் குறைந்துப் போயிடலாம்.
இதனால் யாருக்கு கொண்டாட்டம்னு உள்ளே நுழைஞ்சி பார்த்தால், முனிசி., அலுவலகத்தையே, சில பெரிய ஆபீசர்கள் பெமல் நகருக்கு ஷிப்ட் செய்து அங்கேயே கான்ட்ராக்ட் பிஸ்னஸ் நடத்தி வராங்களாமே.
மாவட்ட நிர்வாகம் என்ன செய்திடும்னு ஆட்டவோ, அசைக்கவோ முடியாதென தெனாவட்டு ஆபீசர்கள் இருக்காங்களாம். மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் உறக்கத்தில் இருக்காங்களோ?

