8 மாதங்களாக முடங்கிய கவுன்சில்!
முனிசி.,யின் கவுன்சில் கூட்டம் நடத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. மாதந்தோறும் நடத்த வேண்டிய இக்கூட்டத்தை இதுவரையில் நடத்தவும் இல்லை. 35 வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தப் பாடும் இல்லை.
முதற்கட்ட நகராட்சித் தலைவரோட பதவிக் காலம் மட்டுமே முடிவடைந்ததே தவிர, நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முதல் இன்னும் இரண்டரை ஆண்டுகள் 'உயிர்' உள்ளபோதும், செயல் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
எல்லா பவரும் நிர்வாக அதிகாரியான கலெக்டர் வசம் இருக்கும்போது, 35 வார்டுகள் உள்ள முனிசி.,யில், அவர் இதுவரைக்கும் ஒரு கூட்டத்தையும் நடத்தவே இல்லை. ஒரு வார்டையும் அவரோ, அவரை சார்ந்த ஆபீசர்களோ பார்வையிட்டதே இல்லை. கான்ட்ராக்ட்காரர்களுடன் கமிஷன் வேலைகளுக்கு பெமல் நகரில் ரகசியமா ஆபீசர்கள் முனிசி., கூட்டத்தை நடத்தி, பணம் பரிமாற்றம் செய்றதா வட்டார தகவல் தெரிவிக்கிறது.
உள்ளாட்சிக்கு உரிய அதிகாரம் இருக்குதா என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது. பொறுப்பான தொகுதி அசெம்பிளி மேடம் கூட இதன் பேரில் கவனம் செலுத்தி இருக்கலாமே. எதுக்கு பலரும் மவுனமாக இருக்காங்களோ?
கவுதம் நகரின் பட்டா பிரச்னைக்கு கவுன்சில் தானே முடிவெடுக்க வேணும். இதில் தில்லுமுல்லு நடக்காமல் ஊழலற்ற நிர்வாகம் அமைக்க யார் என்ன செய்யப் போறாங்களோ. இதுக்காக கவுன்சில் கூட்டம் கூடுமா?
போட்டியா, நோட்டாவா?
கோல்டன் சிட்டியில் உள்ள தேசிய நீலக்கொடி லோக்., தேர்தலில் கோலார் தொகுதியில் இண்டியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட கூப்பிடுறாங்கன்னு பரபரப்பா பேசினாங்க.
அசெம்பிளி தேர்தலில் உசுப்பேத்தினதை போல லோக்., தேர்தலிலும் சிலர் தொடங்கி வெச்சாங்க. ஆனால் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர காலம் நெருங்கிடும்போது, அந்த பேச்சையே காணோம், என்னாச்சோ?
கோல்டு சிட்டியில் இவர்களிடம் கணிசமான ஓட்டு பேங்க் இருப்பதை யாரும் மறுக்கல. ஆனாலும், இவங்கள மதிச்சு ஓட்டுக்கு ரேட்டு பேசுவாங்களா? அல்லது 2019 எலக் ஷன் போல கண்டுக்காமல் விட்டுத் தள்ளிடுவாங்களா? இதனால், கடைசி நிமிடத்தில் இவர்கள் நள்ளிரவில் நோட்டாவுக்கு ஓட்டு என அறிவிப்பாங்களோ?
இலையின் நிலை என்னாகுமோ?
கோல்டன் சிட்டி தொகுதியில் அசெம்பிளி தேர்தலில் இலை கட்சி போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போனது. அதனால், அவர்கள் அப்போது யாரை ஆதரிப்பதுன்னு தெரியாமல் சிதறினாங்க.
கட்சி முடிவுக்கு காத்திருந்து கலைந்து போனாங்க. இவங்க, ஒரு காலத்தில 30,000 ஓட்டு வாங்கினாங்க. 3 முறை அசெம்பிளிக்கும் 6 முறை முனிசி.,யையும் கைபற்றினாங்க. இப்போ இவங்க நிலை என்னாகப் போகுதோ?
லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் மேலிடம், தாமரையுடன் சேராமல் போனால், கோல்டு சிட்டியில் உள்ளவங்க சில பேர் தாமரை பக்கம் வீழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறாங்க. ஏன்னா சில பேர் தாமரையுடன் நெருக்கமாவே இருக்காங்களாம்.

