மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டவில்லை அமித் ஷாவை சந்தித்தபின் பாலு பேட்டி
மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டவில்லை அமித் ஷாவை சந்தித்தபின் பாலு பேட்டி
ADDED : ஜன 14, 2024 12:11 AM
'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசின் நிதி கோரி, தமிழக எம்.பி.,க்கள் குழு நேற்று டில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தது.
இந்த சந்திப்புக்கு பின், தி.மு.க., - எம்.பி., பாலு கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேத பாதிப்புகளுக்கு தமிழக அரசு கேட்டிருந்த, 37,000 கோடி ரூபாயை நிவாரண நிதியாக விரைவாக வழங்க வேண்டுமென அமைச்சர் அமித் ஷாவிடம் தற்போது வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், மாநில பேரிடர் நிதி அனைத்தும் செலவாகிவிட்டது. அதனால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுள்ளோம். விரைவாக அந்த நிதியை தரும்படி கேட்டோம்.
அதற்கு அமைச்சர் அமித் ஷா, ''வெகு விரைவாக நிதியை தந்துவிடுகிறேன். ஆய்வுக்கு சென்றிருந்த குழு இரு நாட்களில் திரும்பவுள்ளன. 21ம் தேதி அறிக்கை தரப்படும்.
''உள்துறையோடு நிதி, விவசாயம் மற்றும் இதர துறைகளும் சேர்ந்து உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பின், 27ம் தேதிக்குள் நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என வாக்குறுதி அளித்துள்ளார்.
பேரிடர் பாதிப்புகளை மத்திய நிதியமைச்சராக இருப்பவர்கள் நேரில் சென்று இதுவரையில் பார்த்ததே கிடையாது. ஆனால், இந்த முறை, நிதி அமைச்சரே நேரில் சென்று பார்வையிட்டார்.
எனவே, தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்த விவகாரத்தில் மிகுந்த கரிசனத்தோடு தான் மத்திய அரசு நடந்து கொள்கிறது.
நிவாரண நிதியை ஒதுக்கிய பிறகுதான், தமிழக அரசின் மீது ஓரவஞ்சனையாக மத்திய அரசு செயல்படுகிறதா என்பதை கூற முடியும்.
மத்திய உள்துறை அமைச்சர் அனைத்து விபரங்களும் தெரிந்து, விஷயத்தை உணர்ந்துள்ளார். ''மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது, தமிழக மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை,'' என்றும் கூறினார். இந்த சந்திப்பு மிக மிக நிறைவாக இருந்தது.
எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என மத்திய அரசை பேசிவிட முடியாது. மத்திய அரசு நிச்சயமாக தமிழக வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மிகுந்த கவலையுடன் உள்ளது. எனவே, வரும் 27க்குள் முடிவெடுப்பதாக கூறியிருப்பதையே, பெரிய விஷயமாக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது டில்லி நிருபர் -.

