வந்தமூரி பிரச்னைக்கு காரணமான காதல் ஜோடியின் திருமணம் பதிவு
வந்தமூரி பிரச்னைக்கு காரணமான காதல் ஜோடியின் திருமணம் பதிவு
ADDED : பிப் 01, 2024 11:07 PM
பெலகாவி: வந்தமூரி பிரச்னைக்கு காரணமான காதல் ஜோடி, சார்--பதிவாளர் அலுவலகத்தில், தங்கள் திருமணத்தைப் பதிவு செய்தது.
பெலகாவி அருகே வந்தமூரி கிராமத்தின் துண்டப்பா நாயக், 25, என்பவரும், அவரின் எதிர்வீட்டில் வசித்த, பிரியங்கா, 23, என்பவரும் காதலித்தனர். ஒரே ஜாதியினர் என்றாலும், பிரியங்கா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் காதலர்கள் இருவரும், கடந்த மாதம் 10ம் தேதி வீட்டைவிட்டு ஓடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். கோபம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர், துண்டப்பாவின் தாயை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச் சென்று, மின்கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கினர்.
இந்த வழக்கில் பிரியங்காவின் குடும்பத்தினர் 13 பேரை, காகாதி போலீசார் கைது செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. விரைவில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். அதில் பிரியங்காவின் வாக்குமூலமும் சேர்க்கப்பட்டு உள்ளது.
பிரச்னை நடந்த பின்னர் பெலகாவியில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில், பிரியங்கா தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரியங்காவுக்கும், துண்டப்பாவுக்கும் நடந்த திருமணம் நேற்று சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இருவருக்கும் நண்பர்கள் சாட்சி கையெழுத்து போட்டனர்.

