திருவள்ளுவர் தின நிகழ்ச்சியில் தமிழர்கள் திரண்டு வாரீர் விழா ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ் அழைப்பு
திருவள்ளுவர் தின நிகழ்ச்சியில் தமிழர்கள் திரண்டு வாரீர் விழா ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ் அழைப்பு
ADDED : ஜன 13, 2024 11:19 PM

பெங்களூரு: ''ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் நாளை மறுநாள் நடக்கும் திருவள்ளுவர் தின நிகழ்ச்சியில், தமிழர்கள் திரளாக திரண்டு ஒற்றுமையை காண்பிக்க வேண்டும்,'' என, விழாக் குழு ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி டி.ரமேஷ் அழைப்பு விடுத்தார்.
விழா ஏற்பாடுகள் குறித்து, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் தமிழ் பிரமுகர்கள் நேற்று இறுதிகட்ட ஆலோசனை நடத்தினர். அப்போது, பையப்பனஹள்ளி ரமேஷ் பேசியதாவது:
பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதியில், நாளை மறுநாள் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படுகிறது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ், ராமலிங்கரெட்டி, ஜார்ஜ், பைரதி சுரேஷ், கிருஷ்ணபைரே கவுடா, ஜமீர் அகமது கான்; கிருஷ்ணகிரி எம்.பி., செல்லகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ரிஸ்வான் அர்ஷத், கிருஷ்ணப்பா, ஹாரிஸ், சீனிவாஸ் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் அடையாளமாக திகழும் திருவள்ளுவரை போற்றி, வணங்கி, நமது உரிமைகளை பெறுவோம்.
பெங்களூரில் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் உள்ளனர். இதில், 1 சதவீதம் என்றாலும் ஒரு லட்சம் பேர். இதில், 10,000 பேர் வந்தாலே நமது விழா பெரும் வெற்றி பெறும். எனவே, தமிழர்கள் திரளாக திரண்டு ஒற்றுமையை காண்பிக்க வேண்டும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அனைவருக்கும் சொந்தமானவர். இதற்கு முன்பும், திருவள்ளுவர் தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடினோம். இம்முறை மேலும் சிறப்பாக கொண்டாடப்படும்.
நாளை காலை 9:00 மணி முதல், திருவள்ளுவர் சிலை அருகே முற்றோதல் நிகழ்ச்சி நடக்கும். அதன் பின், அரசியல் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.
இவ்வாறு அவர் பேசினார்.

