ஜார்க்கண்ட் முதல்வர் சோரனிடம்... கிடுக்கிப்பிடி! பண மோசடி வழக்கில் ஈ.டி. அதிரடி
ஜார்க்கண்ட் முதல்வர் சோரனிடம்... கிடுக்கிப்பிடி! பண மோசடி வழக்கில் ஈ.டி. அதிரடி
ADDED : ஜன 21, 2024 02:03 AM

ராஞ்சி ஜார்க்கண்டில், நில மோசடியில் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
, ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நில மோசடியில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
ஒப்புதல்
இந்த வழக்கில், மாநில சமூக நலத் துறை இயக்குனராகவும், ராஞ்சி துணை கமிஷனராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ஏழு முறை சம்மன் அனுப்பியும், முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராக வில்லை.
ஒவ்வொரு முறையும் பல்வேறு விதமான காரணங்களை கூறி, அவர் விசாரணையை தவிர்த்து வந்தார். சமீபத்தில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எட்டாவது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ஜன., 16 - 20ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என, இறுதியாக தெரிவித்துஇருந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட அவர், ராஞ்சியில் உள்ள தன் வீட்டிலேயே விசாரணை நடத்தும்படி அமலாக்கத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, தலைநகர் ராஞ்சியில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு வந்தனர். ஏழு மணி நேரத்துக்கும் மேல், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விசாரணையையொட்டி, முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டின் முன் ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
சமீபத்தில், மேற்கு வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்றைய விசாரணையின் போது, முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், இரவு 11:00 மணி வரை, முதல்வர் வீட்டை சுற்றி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சூழ்நிலை
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் நடந்தது.
இதில், அமலாக்கத் துறை விசாரணைக்கு பின், சூழ்நிலை அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
முன்னெச்சரிக்கையாக, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விசாரணைக்கு பின், முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஜார்க்கண்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
கைது நடவடிக்கைக்கு பயந்து, விசாரணைக்காக, அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு ஹேமந்த் சோரன் செல்லவில்லை. மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள், அவருக்கு ஆதரவாக இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியேற வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
- பாபுலால் மராண்டி
ஜார்க்கண்ட் பா.ஜ., தலைவர்

