ADDED : ஜன 21, 2024 12:19 AM

பெங்களூரு : அயோத்தி ராமர் கோவிலில் ராமருக்கு தினமும் துளசி மாலை அணிவிக்க, பெங்களூரு ஜோதிடர், அவரது குழுவினர் அயோத்தியில் துளசி தோட்டத்தை அமைத்து, தெய்வ பக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, நாளை வெகுவிமரிசையாக நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து, அயோத்தி ராமர் கோவிலுக்கு, ராமருக்காக பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அயோத்தி ராமருக்கு துளசி மாலை அணிவிக்க, பெங்களூரு ஜோதிடர், அவரது குழுவினர், அயோத்தியில் துளசி தோட்டம் அமைத்து, தெய்வ பக்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
மன்னார்குடி ஜோதிடர்
தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சிவகுமார், ஜோதிடர். பெங்களூரு ஜெயநகரில் 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களின் மகன்கள் ஹரேஷ், வெங்கடகிருஷ்ணன். விளக்கிற்கு ஊற்றும் மூலிகை தீபம் எண்ணெய் நிறுவனத்தையும், சிவகுமார் நடத்துகிறார். இவருக்கு ஏராளமான சீடர்கள் உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, ராமருக்கு துளசி மாலை அணிவிப்பதற்காக, சிவகுமாரும், அவரது சீடர்களும் சேர்ந்து, அயோத்தியில் துளசி தோட்டம் அமைத்துள்ளனர். இந்த தோட்டம் அயோத்தியின் போஜ்பூர் மாவட்டம், ராம்புரா தாலுகா, பண்டூரா கிராமத்தில் அமைந்து உள்ளது.
2 ஏக்கர் தோட்டம்
இந்த தோட்டம் குறித்து சிவகுமார் கூறியதாவது:
நானும், எனது சீடர்களான மைசூரை சேர்ந்த டாக்டர் பூர்ணிமா, ராகவேந்திரா என்கிற ரகு, நஞ்சுண்டா, பானுரேகா, வெங்கடேஷ் ஆகியோர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏதாவது, பரிசு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசினோம்.
அப்போது ராமருக்கு துளசி மாலை அணிவிக்கலாம். இதற்காக நாமே துளசி தோட்டம் அமைப்போம் என்று, யோசனை கொடுத்தார்.
பண்டூரா கிராமத்தில் வசிக்கும், நண்பரான அபிஜித் சிங்கிடம், ராகவேந்திரா பேசினார். அவரது தோட்டத்தில் துளசி செடிகளை வளர்க்க, எங்களுக்கு அனுமதி கொடுத்தார். இதையடுத்து குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள, துளசி வனத்தில் இருந்து, நாட்டு துளசி விதைகளை பெங்களூருவுக்கு வரவழைத்தோம். கிருஷ்ணர் ஜெயந்தி அன்று, துளசி விதைகளுக்கு பூஜை செய்து இங்கிருந்து அனுப்பி வைத்தோம்.
ராமர் மீது பக்தி
அந்த துளசி விதைகளை, அபிஜித் சிங் 2 ஏக்கர் தோட்டத்தில் நட்டு வளர்க்க ஆரம்பித்தார். தற்போது துளசி செடிகள் நன்கு வளர்ந்து உள்ளன. அங்கு துளசி மாலை கட்ட ஆள் இல்லை என்று, எங்களிடம் அபிஜித் சிங் கூறினார்.
இதனால் பெங்களூரில் இருந்து துளசி மாலை கட்டுவதற்கு, கிரிஷ், நாராயணசாமி, அருண் ஆகிய மூன்று பேரை, எங்கள் சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்தோம்.
அவர்கள் மூன்று பேரும் தினமும் துளசி மாலை கட்டி, ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த துளசி மாலையை பயன்படுத்துவதற்கு, ராமர் கோவில் கமிட்டியில் உள்ள கோபால்ஜி, சங்கர்ஜியிடம் அனுமதி பெற்று உள்ளோம். அயோத்தி ராமர் கோவில் திறப்பு அன்று, ராமருக்கு செலுத்த நான்கரை அடி, தயார் செய்து வருகின்றனர்.
ராமர் மீதான பக்தி காரணமாக, நானும், எனது சீடர்களும் இதை செய்கிறோம். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

