உத்தவ் சிவசேனா எம்.எல்.ஏ., நிறுவனங்களில் ஈ.டி., ரெய்டு
உத்தவ் சிவசேனா எம்.எல்.ஏ., நிறுவனங்களில் ஈ.டி., ரெய்டு
ADDED : ஜன 10, 2024 12:57 AM
மும்பை, ஜன. 10-
பண மோசடி வழக்கில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.எல்.ஏ., ரவீந்திர வைகருக்கு சொந்தமாக, மஹாராஷ்டிராவில் உள்ள சில இடங்களில் ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள ஜோகேஸ்வரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ரவீந்திர வைகர், 64. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவை சேர்ந்த இவர் மீது, தோட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்ட சட்ட விரோதமாக அனுமதியளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும் எம்.எல்.ஏ., வைகர் உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அமலாக்கத்துறையினர் வைகர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய மும்பையில் உள்ள ஏழு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

