ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்... கேலிப்பொருளாக மாறியது ரூ.640 கோடி போர் விமானம்!
UPDATED : ஜூலை 05, 2025 12:22 PM
ADDED : ஜூலை 05, 2025 12:12 PM

திருவனந்தபுரம்: பழுதான நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், இணையத்தில் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
பிரிட்டீஷ் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பல்களை காப்பது, வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த போர்க்கப்பல், பணியில் ஈடுபட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இதில் இருந்து ஜூன் 14ல் புறப்பட்ட எப் 35 பி போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னையை எதிர்கொண்டது. இதையடுத்து அவசர உதவி கோரியதால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசு உத்தரவுபடி எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனாலும், விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பறக்க முடியவில்லை.
ரூ.640 கோடி
அப்போது முதல், மூன்று வாரங்களாக இந்த விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை பழுது நீக்கும் முயற்சியில், பிரிட்டீஷ் கடற்படை பொறியாளர்கள், விமானம் தயாரித்த நிறுவனத்தின் பொறியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. ரூ.640 கோடி மதிப்புள்ள அதிநவீன போர் விமானம், இன்னொரு நாட்டில் இப்படி பழுதாகி நிற்பது பிரிட்டனுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் பெரும் அவமானமாக கருதப்படுகிறது.
என்ன நடவடிக்கை?
இந்த விவகாரம் குறித்து, பிரிட்டீஷ் பார்லிமென்டில் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., ஒபிஸ் ஜெக்டி கேள்வி எழுப்பினார். 'இந்திய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள எப் 35 பி போர் விமானத்தை மீட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அவர் கேட்டார். ''விமானத்தை கொண்டு வர இன்னும் எத்தனை காலம் ஆகும், அதில் இருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் ரகசியத்தை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
24 மணி நேரமும்....!
இதற்கு பதில் அளித்த பிரிட்டன் அமைச்சர் லுாக் பொல்லார்டு, ''விமானம் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. நமது இந்திய நண்பர்கள் சிறப்பான உதவிகளை செய்து வருகின்றனர். விமானத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் விமானப்படை பணியாளர்கள், 24 மணி நேரமும் அதன் அருகிலேயே உள்ளனர்,'' என்றார். இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து கொண்டு செல்வதா, சரக்கு விமானத்தில் துாக்கிச் செல்வதா என்று முடிவு செய்ய முடியாமல், பிரிட்டன் ராணுவமும், கடற்படையும் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிநவீன சென்சார்கள்
எப் 35 பி போர் விமானம், அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் என்ற முன்னணி விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது, குறுகிய தொலைவு கொண்ட ஓடுபாதையிலும் 'டேக்ஆப்' செய்யும்; செங்குத்தாக தரை இறங்கும் திறன்களை கொண்டது.'ஸ்டெல்த்' எனப்படும் ரேடார்களில் கண்டறிய முடியாத தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டது. இந்த விமானம், அமெரிக்கா தவிர, பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டு ராணுவத்தினர் வசம் மட்டுமே உள்ளது.வேறு எந்த நாடுகளிடமும் இல்லை. அதனால், விமானத்தின் தொழில்நுட்பங்களை பொக்கிஷம் போல பாதுகாக்கின்றனர்.
அற்புதமான இடம்
கேரள சுற்றுலாத்துறையும் தன் பங்குக்கு இந்த விமானத்தின் படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. 'கேரளா வந்து விட்டால், திரும்பிச் செல்ல மனம் வராது' என்று பொருள்படும் வகையில், 'கேரளா ஒரு அற்புதமான இடம், நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நிச்சயமாக பரிந்துரை செய்கிறேன்' என்று விளம்பரம் வெளியிட்டுள்ளனர். விமானத்தை மாட்டு வண்டியில் கொண்டு செல்வது போலவும், இரும்பு வியாபாரிகள் பேரம் பேசுவது போலவும் மீம்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.