வளர்ச்சியை தடுக்கும் எதிர்க்கட்சிகள் உ.பி., முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு
வளர்ச்சியை தடுக்கும் எதிர்க்கட்சிகள் உ.பி., முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு
ADDED : மார் 26, 2025 08:38 PM

ஆக்ரா:“மாநில வளர்ச்சிக்கு தடையாக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன,”என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.,வின் 8 ஆண்டு ஆட்சி நிறைவு விழாவை முன்னிட்டு, ஆக்ராவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
உ.பி.,யில் 2017ம் ஆண்டுக்கு முன், குண்டர் மற்றும் மாபியாக்களின் ஆட்சி நடந்தது என்பது 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தெரியும். இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஏழைகள் பசியால் வாடி உயிரிழந்தனர். இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இடம்பெயர்ந்தனர்.
உ.பி.,யில், பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன் தான் மாநிலம் முழுதும் சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகியவை மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக இருக்கின்றன.
அனைத்து திட்டங்களையுமே கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்றனர். மக்களிடம் தவறான கருத்துக்களைப் பரப்புகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காலத்தில், அரசுக்கு எதிராக காங்கிரசும், சமாஜ்வாதியும் போராடின. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தியதை இரு கட்சிகளும் விரும்பவில்லை. அதேபோலத்தான், மஹா கும்பமேளா குறித்தும் தவறான பிரசாரம் செய்தனர்.
அவர்களின் ஆட்சிக் காலத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பதை உத்தர பிரதேச மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
முன்பு இதே மாநிலத்தில் விரக்தி அடைந்திருந்த விவசாயிகள், இப்போது மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். பா.ஜ., ஆட்சி அமைந்தபின், விவசாயிகள் தற்கொலை என்பதே இல்லை.
மேலும், 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' போன்ற திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, விரைவுச் சாலைகள், மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையங்கள் மேம்பாடு என உத்தர பிரதேசம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நாட்டிலேயே உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு, கரும்பு மற்றும் எத்தனால் ஆகிய உற்பத்தியில் உத்தர பிரதேசம்தான் முன்னிலை வகிக்கிறது. மிகவும் வறட்சி நிலவிய மாநிலத்தை செழிப்பாக மாற்றியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.