ADDED : ஜன 19, 2024 12:37 AM
விஜயநகர் : ஹோட்டலில் காபி குடித்து கொண்டிருந்த, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், அவரது நண்பர்கள் இருவரை, போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு விஜயநகரில் உள்ள ஹோட்டலுக்கு, சில நாட்களுக்கு முன் மூன்று வாலிபர்கள் சென்றனர். அவர்கள் அங்கு வரும் இளம்பெண்களை கேலி, கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் ஹோட்டலுக்கு வந்த இளம்பெண் ஒருவர், பில் கவுன்டர் அருகில் நின்று, காபி குடித்து கொண்டு இருந்தார்.
அப்போது மூன்று வாலிபர்களும் ஏதோ பேசினர். திடீரென ஒரு வாலிபர் மட்டும், இளம்பெண் அருகில் வந்து, அவரை வேண்டும் என்றே இடித்ததுடன், அவர் தோளில் கையை வைத்து தடவி, பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வாலிபரிடம் தகராறு செய்தார்.
இதனால் ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்கள், மூன்று வாலிபர்களையும் தட்டி கேட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் குறித்து, இளம்பெண் போலீசில் புகார் செய்யவில்லை.
ஆனாலும் இதுபோன்று வேறு யாருக்கும் நடக்க கூடாது என்பதால், ஹோட்டலில் காசாளர் சுகன்யா, மூன்று வாலிபர்கள் மீதும், விஜயநகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த விஜயநகர் போலீசார் மூன்ழு வாலிபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

