பட்ஜெட்டில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள்... என்னென்ன? துறை வாரியாக ஆலோசனையை துவக்கினார் முதல்வர்
பட்ஜெட்டில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள்... என்னென்ன? துறை வாரியாக ஆலோசனையை துவக்கினார் முதல்வர்
ADDED : ஜன 21, 2024 01:18 AM
பெங்களூரு : கர்நாடக அரசின் 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 16ம் தேதி தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, மக்களுக்கு அறிவிக்க வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து, துறைவாரியாக அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று முதல் ஆலோசனையை துவக்கினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட ஐந்து முக்கியமான வாக்குறுதித் திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தப்பட்டன.
நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2023 - 24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை, 3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்திருந்தார்.
அதிகபட்ச பட்ஜெட்
இந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி கூட்டத்தொடர் துவங்குகிறது. பிப்., 23ம் தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி 16ம் தேதி, முதல்வர் சித்தராமையா 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இது அவர் தாக்கல் செய்யும் 15வது பட்ஜெட். இதன் மூலம், நாட்டில் அதிகபட்ச பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை சித்தராமையாவுக்கு கிடைக்கும்.
இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பட்ஜெட் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
16 துறைகள்
இந்நிலையில், மக்களுக்கு அறிவிக்க வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று முதல், துறைவாரியாக ஆலோசனையை துவக்கினார்.
சுகாதாரம், தோட்டக்கலை, சுரங்கம், பட்டு வளர்ப்பு, கால்நடை, திட்டம், உயர்கல்வி, பெங்களூரு வளர்ச்சி, நீர்ப்பாசனம், அறிவியல் தொழில்நுட்பம், சிறிய நீர்ப்பாசனம், வனம், சுற்றுச்சூழல், உணவு, கூட்டுறவு என, 16 துறைகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன், பெங்களூரில் முதல்வர் சித்தராமையா முதல் நாளான நேற்று, முதற்கட்ட ஆலோசனை நடத்தினார்.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்ததில் செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்கள்; செயல்படுத்தியுள்ள திட்டங்கள்; ஐந்து வாக்குறுதித் திட்டங்களுக்கு ஆன செலவு விபரம்; வருவாயை பெருக்குதல்; அடுத்து அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள்; நிதி திரட்ட வழி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
நீர்ப்பாசன திட்டங்கள்
கூட்டத்தில், மாநில தலைமை செயலர் ரஜனீஷ் கோயல், திட்ட இயக்குனர் ஷாலினி ரஜனீஷ் உட்பட உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
மற்ற துறைகளுடன் எப்போது ஆலோசனை நடத்தப்படும் என்பது குறித்து, முதல்வர் அலுவலகம் நேற்று வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
முதல்வர் ஆலோசனை நடத்துவதற்கு முன்னதாக, துணை முதல்வர் சிவகுமார், தன் துறைகளான பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனம் குறித்து உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு வளர்ச்சிக்கு தனித் திட்டங்கள் வகுப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளன.
மேலும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுஉள்ளன.

