ADDED : ஜன 13, 2024 11:10 PM

ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்: வீட்டின் குளியல் அறையில் காவலாளி பிணமாக கிடந்த வழக்கில், மனைவி, கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால், தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் வெங்கடரமணா நாயக், 35. இவரது மனைவி நந்தினி, 32. இவர்கள் இருவரும் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் 2வது செக்டாரில் வசித்தனர். 9ம் தேதி இரவு, போலீஸ் ஹெல்ப்லைன் 112க்கு போன் செய்த நந்தினி, வெங்கடரமணா வீட்டின் குளியல் அறையில் தவறி விழுந்ததாகவும், தலையில் பலத்த காயம் அடைந்து இறந்ததாகவும் கூறினார்.
ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசார் அங்கு சென்று, வெங்கடரமணா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன்பின் நந்தினியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு, பின் முரணாக பதில் சொன்னார். இதனால் அவரது மொபைல் எண்ணுக்கு வந்த, அழைப்புகள் குறித்து, போலீசார் விசாரித்தனர்.
ஆந்திராவை சேர்ந்த நிதிஷ்குமார், 33, அடிக்கடி பேசியது தெரிந்தது. ஆந்திராவுக்குச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நந்தினியுடன் சேர்ந்து, வெங்கடரமணாவை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரையும், நந்தினியையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
நந்தினியும், நிதிஷ்குமார் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்தது. அடிக்கடி பெங்களூரு வந்து, நந்தினியுடன் நிதிஷ்குமார் உல்லாசமாக இருந்து உள்ளார்.
கடந்த 5ம் தேதி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நிதிஷ்குமார் மாலை அணிந்து சென்று இருந்தார்.
சபரிமலையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லாமல், பெங்களூரு வந்து நந்தினி வீட்டிற்கு சென்று, அவருடன் உல்லாசமாக இருந்து உள்ளார்.
அப்போது திடீரென வெங்கடரமணா வீட்டிற்கு வந்துவிட்டார். இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரிடம் தகராறு செய்தார்.
அவரை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்று, கல்லால் தலையில் தாக்கி இருவரும் கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலை குளியல் அறைக்கு கொண்டு வந்துபோட்டதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

