இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை தொல்லை கொடுத்த வாலிபர் கைது
ADDED : ஜன 13, 2024 11:12 PM

ஹாசன்: காதல் தொல்லையால், இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் பேலுார் நிடுகுடு கிராமத்தில் வசிப்பவர் ஜெயண்ணா. இவரது மகள் சங்கீதா, 21. நிடுகுடு கிராமத்தைச் சேர்ந்த, ஹொன்னய்யா மகன் சிவா, 24. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சங்கீதாவை ஒருதலையாக காதலித்தார்.
சில தினங்களுக்கு முன்பு தனது காதலை, சங்கீதாவிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், சங்கீதாவின் பெற்றோரை சந்தித்து, “உங்கள் மகளை எனக்கு, திருமணம் செய்து கொடுங்கள்,” என்று கேட்டு உள்ளார்.
இதற்கும் சங்கீதா பெற்றோர் மறுத்தனர். இதையடுத்து சங்கீதாவை தினமும் பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார்.
கடந்த 11ம் தேதி இரவு கோவிலுக்குச் சென்ற சங்கீதாவை வழிமறித்து, “என்னை காதலிக்கவில்லை என்றால், உன்னை கொன்று விடுவேன்,” என்றும் மிரட்டி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த சங்கீதா, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரில், பேலுார் ரூரல் போலீசார் சிவாவை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

