ADDED : மார் 27, 2025 08:49 PM
ஸ்வரூப் நகர்: போலீசில் சிக்க வைத்ததாக சந்தேகத்தின்பேரில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்வரூப் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் சந்தன். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தன், அதன் பின் திரும்பவில்லை. புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில், கடைசியாக ஸ்வரூப் நகரை சேர்ந்த சூரஜ், 24, என்பவருடன் சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் சூரஜை பிடித்து போலீசார் விசாரித்தபோது, சந்தன் கொலையானது தெரிய வந்தது.
வழக்கு ஒன்றில் போலீசில் தான் சிக்கியதற்கு சந்தன் காரணம் என, சூரஜ் சந்தேகித்துள்ளார். இதற்கு பழிவாங்க, அவரை தன் கூட்டாளிகளான அங்கித், 20, அபிஷேக், 22, ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததை சூரஜ் ஒப்புக்கொண்டார். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
செங்கல்லால் சந்தனை அடித்துக் கொன்று, பம்ப் ஹவுஸில் உள்ள ஆழ்துளைக்கிணறில் சடலத்தை போட்டு, செங்கற்களால் மூடிச் சென்றதை தெரிய வந்தது.
சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.