இன்று உலக ஆட்டிசம் தினம் பயிற்சியால் ஆட்டிசம் குறைபாட்டை ஒழுங்குப்படுத்தலாம்
இன்று உலக ஆட்டிசம் தினம் பயிற்சியால் ஆட்டிசம் குறைபாட்டை ஒழுங்குப்படுத்தலாம்
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 09:13 AM

நாமக்கல்:
ஆட்டிசம் குறைபாட்டை முழுதும் குணப்படுத்த முடியாவிட்டாலும், பயிற்சிகள் மூலம் ஒழுங்கு நிலைக்கு கொண்டுவர முடியும் என நாமக்கல் இயன்முறை மருத்துவர் கவியரசு கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும், ஏப்., 2ல், உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சராசரியாக, 2 கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டிசம் என்பது மூளை நரம்பியல் வளர்ச்சி நிலையில், தகவல்களை பயன்படுத்தி புரிந்துகொள்ளும் திறனை தடுப்பது, பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை, சராசரியாக பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. ஆறு மாதம் முதல், மூன்று வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். மூன்று வயதுக்குள் கண்டுபிடித்தால், உரிய பயிற்சி அளித்து ஓரளவு குறைபாட்டை சரி செய்து விடலாம். ஆட்டிசம் விழிப்புணர்வின் முக்கிய அம்சம், தவறான எண்ணங்களை அகற்றுவதே. ஆட்டிசம் விழிப்புணர்வை அதிகரிப்பது என்பது, தனி நபர்கள், அரசு, சமூகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு கூட்டு முயற்சி.
ஆட்டிசத்தின் அறிகுறிகள்...
யாருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது. பயம், ஆபத்தை உணராமல் இருப்பது. கண்களை பார்த்து பேசுவதை தவிர்ப்பது. காரணம் இல்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது. தன்னந்தனியே சிரிப்பது. வித்தியாசமான நடவடிக்கைகளான கைகளை தட்டுவது குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பது இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படை கூறுகள்.
ஆரம்ப கால பயிற்சி, சிறப்பு கல்வி, ஆக்குபேஷனல் தெரபி, நடத்தை சீராக்கல் பயிற்சி, பேச்சு பயிற்சி, உணர்வு துாண்டல் பயிற்சி கொடுத்தல் ஆகியவை முக்கிய சிகிச்சை முறைகள். இசை, நடனம், ஓவியம் என, எல்லா வகையான வகுப்புகளையும் அவர்களுக்கு அளித்தல் அவசியம். பெற்றோர்கள் தான் இவ்வகையான குழந்தைக்கு சிறந்த மருத்துவர். ஆட்டிசம் குறைபாட்டை முழுதும் குணப்படுத்த முடியாவிட்டாலும், இவ்வகையான பயிற்சிகள் மூலம் ஒழுங்கு நிலைக்கு கொண்டுவரமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.