மதுரை காமராஜ் பல்கலையில் நிதிநிலையை சமாளிக்க ரூ.1000 கோடி
மதுரை காமராஜ் பல்கலையில் நிதிநிலையை சமாளிக்க ரூ.1000 கோடி
UPDATED : ஏப் 01, 2025 12:00 AM
ADDED : ஏப் 01, 2025 08:14 AM

மதுரை:
மதுரையிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் மதுரை காமராஜ் பல்கலைக்கு முதலீடு நிதி திரட்டலாம். வருமான வரி விலக்கு சலுகை வழங்கினால் ரூ. 1000 கோடி வரையிலும் சேகரிக்கலாம் என செனட் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலை செனட் கூட்டம் நடந்தது. பல்கலை கன்வீனர் குழு தலைவர், கல்லுாரி கல்வி ஆணையருமான சுந்தரவள்ளி தலைமை வகித்தார். பதிவாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தேர்வாணையர் முத்தையா, சிண்டிகேட் உறுப்பினர்கள் புஷ்பராஜ், தீனதயாளன் உள்ளிட்ட செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கவர்னர் பரிந்துரைத்த செனட் உறுப்பினரும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவருவமான என்.ஜெகதீசன் பேசும்போது, பல்கலை நிர்வாகத்தைக் கவனிக்க 4 உறுப்பினர்களைக் கொண்ட கன்வீனர் குழுவில் தற்போது 2 உறுப்பினர் மட்டுமே உள்ளனர்.
அதுவும் ஒரு சிண்டிகேட் உறுப்பினர் மட்டுமே பல்கலை விவகாரங்களை கையாளுகிறார். கன்வீனர் குழுத் தலைவர் சென்னையில் இருப்பதால் 2 உறுப்பினர் சில காரணங்களுக்காக குழுவிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததால் குழுவில் 2 காலியிடங்கள் ஏற்பட்டன. இக்குழுவில் காலியிடங்களை நிரப்பவேண்டும் என்றார். சுந்தரவள்ளி இப்பல்கலை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை இப்பல்கலையை நிர்வகிக்க மறுசீரமைக்கப்பட்ட குழுவில் இரண்டு உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் என்றார். பேராசிரியர் சுல்தான் பேசுகையில், கல்லுாரிகளில் பிற முதுநிலை பாடப்பிரிவுகளை விட கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு கல்வி, தேர்வுக் கட்டணம் அதிகரிப்பால் மாணவர்கள் பாதிக்கின்றனர். இதை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தணிக்கை ஆட்சேபனை
உறுப்பினர்கள் பேசுகையில், இப்பல்கலையில் 2015க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர் அல்லாதவர்களுக்கு தலைமை செயலக அலுவலர்களுக்கான விதிமுறை சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறி, கூடுதலாக வழங்கிய தொகையை சம்பளத்தில் பிடிக்க எதிர்ப்பு உள்ளது. இது குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றனர்.
பேராசிரியர் வேளாங்கன்னி ஜோசப், பல்கலையில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தணிக்கை ஆட்சேபனையால் நிதி பிரச்னை உள்ளது. இதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த சுந்தரவள்ளி, 'பல்கலை நிதி தொடர்பான எதுவாக இருந்தாலும், நிதி அலுவலரின் ஆலோசனை பரிந்துரையின்படி இருக்கவேண்டும். இது இல்லாதபோது தான் தணிக்கை பிரச்னை ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இதை தவிர்க்கவேண்டும் என்றார்.
கட்சி பிரமுகர்களுக்கு தடை
முன்னாள் பேராசிரியர் சந்திரபிரபு பேசுகையில், பல்கலை பதிவாளர் அறை உள்ளிட்ட இப்பல்கலை வளாகத்திற்கு அரசியல் பிரமுகர் உள்ளிட்ட பலர் அனுமதியின்றி வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி தடுக்கவேண்டும். இப்பல்கலையில் முன்பெல்லாம் பல்கலை கார்பஸ் நிதி என 800 கோடி இருப்பு இருக்கும். தற்போதும் அது போன்று நிதியை திரட்ட முடியும். இதற்காக சிறப்பு கமிட்டி அமைத்து, மதுரையிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் முதலீடு நிதி திரட்டலாம். நிதி வழங்குவோருக்கு வருமான வரி விலக்கு சலுகை வழங்கினால் ரூ. 1000 கோடி வரையிலும் சேகரிக்கலாம். தற்போதைய நிதி நெருக்கடி தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும், என்றார்.
ஆய்வின்போது, ஆராய்ச்சி மாணவர்கள் இரு கட்டுரைகளை வெளியிட்டால் மட்டும் பிஎச்டி வழங்கப்படும் போன்ற நிபந்தனையை தளர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் விவாதம் நடந்தது. கல்வி பேரவையில் கொண்டு வந்த 70க்கும் மேற்பட்ட தீர்மானங்களும் செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மாணவர்கள் முற்றுகை
செனட் கூட்டம் முடிந்த நிலையில், பல்கலைக்கு வந்த எஸ்.எப்.ஐ., மாணவர் அமைப்பினர் 40 பேர், அவுட்போஸ்ட்டில் உள்ள பல்கலை கல்லுாரியில் மாணவர்கள் வருகை பதிவேடு தொடர்பாக அபராதம் விதித்த பொருளாதார பேராசிரியை ஒருவர் குறித்து விசாரிக்க குழு அமைக்க வலியுறுத்தி பதிவாளர் அறையை 15 நிமிடம் முற்றுகையிட்டனர். அவர்களை சிண்டிகேட் உறுப்பினர் கேத்ராஜ் தலைமையிலான 4 பேர் சமரசம் செய்தனர்.