ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம்
ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம்
UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 08:55 AM
புதுச்சேரி :
புதுச்சேரி கல்வி துறையில் பணியிட மாறுதல் கொள்ளை வெகு விரைவில் இறுதி செய்யப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணி நியண ஆணை வழங்கும் விழாவில், அவர், பேசியதாவது:
கல்வி துறையில் 2021ம் ஆண்டில் இருந்து பல்வேறு விதமான பதவி உயர்வுகள், புதிய பணி நியமனங்கள், காலி பணியிடங்கள் நிரப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது, வழங்கப்பட்டுள்ள பணி நியமன ஆணை என்பது 19 ஆண்டுகள் செய்யப்படாமல் இருந்த ஒரு விஷயம். இவை அனைத்தும் தகுதியின் அடிப்படையில் அரசியல் தலையீடு இன்றி வழங்கி உள்ளோம்.
நமக்கு தேவைப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கூடிய ஒரு கவர்னரை நமக்கு கிடைத்துள்ளார். அதன் மூலம் நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அதுபோல், முதல்வர் எங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
ஏற்கனவே, ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் புதியதாக வருபவர்களுக்கு பணி ஆணை கொடுத்து விட்டால், சீனியாரிட்டி பிரச்னை வந்து விடும். அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முன், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி நியண ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி துறையில் பணியிட மாறுதல் கொள்கை வெகு விரைவில் தொழில் சங்கங்களோடு கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்படும். கல்வி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 288 ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தரமாக்குவது குறித்தும் சிந்தித்து வருகிறோம்.
புதுச்சேரியில் ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும், சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவதற்கும், ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாக இல்லாமல், அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.