2 துணை முதல்வர்: விஜய், திருமாவை கூட்டணிக்கு இழுக்க வலை: பாஜ பச்சைக்கொடி
2 துணை முதல்வர்: விஜய், திருமாவை கூட்டணிக்கு இழுக்க வலை: பாஜ பச்சைக்கொடி
ADDED : ஜூன் 22, 2025 02:04 AM

சென்னை: வலுவான தி.மு.க., அணியை தேர்தலில் வீழ்த்த விஜய், திருமாவளவன் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்துள்ள அ.தி.மு.க., தலைமை 'ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள்' என கூட்டணி வியூகத்தை மாற்றியுள்ளது. இந்த வியூகத்திற்கு பா.ஜ., தலைமையும் பச்சைக்கொடி காட்டியுள்ளதை தொடர்ந்து த.வெ.க.,வையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கூட்டணிக்கு இழுக்க வலை விரிக்கப்பட்டு உள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க., பணபலம், அதிகார பலம் மற்றும் கூட்டணி கட்சிகள் பலத்துடன், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. 10 கட்சிகள் ஆதரவுடன் களமிறங்கும் அந்த அணியை வீழ்த்த, பா.ஜ., ஆதரவு மட்டும் போதாது. அதனால், பா.ம.க., - தே.மு.தி.க.,வை சேர்க்க, பழனிசாமி முயற்சி மேற்கொண்டார்.
ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காததால் தே.மு.தி.க., வுக்கு கோபம்; ராமதாஸ் - அன்புமணி சண்டையால், பா.ம.க.,வில் குழப்பம் என்ற புதிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வின் பாார்வை, விஜய், திருமாவளவன் மீது திரும்பி இருக்கிறது.
ஏற்கனவே இந்த முயற்சியில் பா.ஜ., மேலிடம் ஈடுபட்டது. விஜய், திருமாவளவனிடம் பேச்சு நடத்தப்பட்டது; ஆனால் 'ரிசல்ட்' சரியாகவில்லை என்பதால் இம்முறை அப்பொறுப்பை பழனிசாமி ஏற்றிருக்கிறார். அதன்படி கூட்டணிக்கான புதிய வியூகத்தை அ.தி.மு.க., வகுத்திருக்கிறது.
மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன, அதே கூட்டணி ஆட்சி திட்டத்தை கொஞ்சம் புதுப்பித்து, 'ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள்' என, மாற்றியிருக்கிறது, அ.தி.மு.க., தலைமை.
த.வெ.க., தலைவர் விஜயும், வி.சி., தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க., அணியில் சேரும் பட்சத்தில், இருவருக்கும் துணை முதல்வர் பதவிகள் தரப்படும் என்பதே, அ.தி.மு.க., சொல்லப்போகும் செய்தி. அதை மையமாக வைத்து, அ.தி.மு.க., தலைமை நடத்தப் போகும் பேச்சுக்கு, பா.ஜ., தலைமையும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., - வி.சி., - த.வெ.க., அணிசேரும் நிலை வருமானால், அதில் சேர, தே.மு.தி.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளும் முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியொரு பலமான கூட்டணி அமையுமானால், வெற்றி எளிதாகி விடும் என்பதால், அதற்கான முயற்சியில் இறங்க, அ.தி.மு.க., ஆயத்தமாகி வருகிறது.