விஜய் அல்லது சீமானை கூட்டணியில் சேர்க்க அமித் ஷாவிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்
விஜய் அல்லது சீமானை கூட்டணியில் சேர்க்க அமித் ஷாவிடம் அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : மார் 27, 2025 04:58 AM

'தே.ஜ., கூட்டணியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் இடம் பெறுவதில் ஆட்சேபணை இல்லை.
'கூட்டணியில், த.வெ.க., தலைவர் விஜய் அல்லது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என்பது உறுதியாகி விட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதால், அவர் டில்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
பன்னீர்செல்வம், தினகரன் போன்றோரை அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என அமித் ஷா தெரிவித்தபோது, பழனிசாமி மறுத்துள்ளார். மீண்டும் அவர்கள் இருவரையும் கட்சியில் சேர்ப்பதை, மாவட்டச் செயலர்கள் யாரும் விரும்பவில்லை.
தே.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரன் இடம் பெறுவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. லோக்சபா தேர்தலில் பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டது போல், அவரும், அவரது ஆட்களும் தனி சின்னத்தில் அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்.
தேர்தலில் அ.தி.மு.க., -- தி.மு.க., - நாம் தமிழர், - த.வெ.க., என, நான்கு முனைப்போட்டி ஏற்பட்டு, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிவிடக்கூடாது. தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, மக்கள் தயாராக உள்ளனர். தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை, ஒட்டுமொத்தமாக தே.ஜ., கூட்டணி அறுவடை செய்ய வேண்டும்.
அதற்கு தேர்தல் களத்தை, மும்முனை போட்டியாக மாற்ற வேண்டும். நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.,வை, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்தால், 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.
த.வெ.க., தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருந்தால், நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்க வேண்டும். அக்கட்சி நம் கூட்டணியில் இணையும்போது, தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, அந்த கட்சிகளில் ஒன்றை சேர்ப்பதற்கு பேச்சு நடத்த வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில் கூடுதலாக மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளது. எனவே, தே.ஜ., கூட்டணிக்கு, த.வெ.க., அல்லது நாம் தமிழர் கட்சி இடம் பெற வேண்டியது அவசியம் என பழனிசாமி தெரிவித்துள்ளார். இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -