ஐந்தாம் வகுப்பு கணக்கே தெரியவில்லை: வளாக நேர்காணலில் நொந்துபோன அதிகாரி
ஐந்தாம் வகுப்பு கணக்கே தெரியவில்லை: வளாக நேர்காணலில் நொந்துபோன அதிகாரி
ADDED : மார் 26, 2025 03:54 AM

பெங்களூரு: 'சமூக வலைதளங்கள் குறித்த சிக்கலான விஷயங்களுக்கு அநாயசமாக விடை காணும், 'ஜெனரேஷன் இசட்' இளசுகளுக்கு, ஐந்தாம் வகுப்பு அடிப்படை கணிதத்துக்கு விடை தெரியவில்லை' என, பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி பதிவிட்டது, சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆசிஷ் குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தன் நிறுவனத்துக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்ய, 50 மாணவர்களை வளாக நேர்காணல் செய்ததாக கூறியுள்ளார். அதில், ஐந்தாம் வகுப்பு கணிதம் ஒன்றுக்கு விடை கேட்டதாகவும், வெறும் இரண்டு மாணவர்களே சரியாக விடை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பி.பி.ஏ., - பி.சி.ஏ., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் நிலை இது என்றால், இன்ஸ்டாவில் அல்கோரிதம்களுக்கு விடை காணும், நம் இளைய தலைமுறை, அடிப்படை கணிதத்தில் பின்தங்குவது அதிர்ச்சி அளிப்பதாக ஆசிஷ் குப்தா கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் அல்கோரிதம் என்பது, இன்ஸ்டாகிராம் பயனர்கள் பார்க்கும் உள்ளடக்கம் மற்றும் அது எந்த வரிசையில் காட்டப்படுகிறது என்பதை தீர்மானிக்கப் பயன்படுத்தும் சிக்கலான விதிகள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பாகும்.
கல்வியாளர்கள், நிறுவனங்கள், வழிகாட்டிகள் முன்வந்து மாணவர்களிடம் நிலவும் இந்த இடைவெளியை சரிசெய்ய வேண்டும்; நுட்பமான சிந்தனையுடன், அடிப்படை கணித அறிவும் இணைவது அவசியம் என்றும் ஆசிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், விமர்சித்தும் ஏராளமானோர் பதிவிட்டனர். ஆசிஷ் குப்தா சரியான பிரச்னையை தெரிவித்திருப்பதாக சிலரும், ஐந்தாம் வகுப்பு கணித பாடத்துக்கும் வேலைக்கான தேர்வுக்கும் என்ன தொடர்பு என்று சிலரும் பதிவிட்டுள்ளனர்.