100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்க சொல்லி முதல்வர் கடிதம்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்க சொல்லி முதல்வர் கடிதம்
ADDED : மார் 28, 2025 12:39 AM

சென்னை: 'மத்திய அரசுக்கு எதிராக, நாளை தி.மு.க., நடத்த உள்ள ஆர்ப்பாட்டங்களில், நுாறு நாள் வேலை இல்லாததால் பாதிக்கப்பட்ட, கிராமப்புற தொழிலாளர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்' என, கட்சி தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் துவங்கி, ஒவ்வொரு திட்டத்திலும், தமிழகத்துக்குரிய நிதியை, மத்திய அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் வழங்குவதில்லை.
அரசியல் பார்வையுடன், தமிழகத்தை ஓரம்கட்ட நினைக்கிறது. நுாறு நாள் வேலை திட்டத்தில், மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் வாயிலாக, ஊதியம் வழங்கப்படுகிறது.
எனினும், மத்திய அரசின் நிதி பங்களிப்பே, இதில் முதன்மையானது என்பதால், உழைக்கும் ஏழை மக்களுக்கு, முழுமையான அளவில், ஊதியம் வழங்க இயலவில்லை. தமிழகத்தை போலவே, கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும், நுாறு நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை.
பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் இடையேயும் அதை எதிரொலிக்க செய்ய வேண்டும்.
எனவே, நுாறு நாள் வேலை திட்டத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை, உடனே விடுவிக்கக் கோரி, தமிழகம் முழுதும், நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில், நுாறு நாள் வேலை கிடைக்காமல், பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழிலாளர்களையும், பங்கேற்க செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.