லட்சக்கணக்கில் முருக பக்தர்கள் திரண்டும் விற்பனையில்லை; டாஸ்மாக் அதிகாரிகள் ஏமாற்றம்
லட்சக்கணக்கில் முருக பக்தர்கள் திரண்டும் விற்பனையில்லை; டாஸ்மாக் அதிகாரிகள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 25, 2025 02:15 AM

மதுரை :மதுரையில் மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறும்போது டாஸ்மாக் விற்பனை எகிறும் என்ற நிலையில், ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டின்போது எவ்வித மாற்றமும் இன்றி, வழக்கமான விற்பனையே இருந்தது.
பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தும்போது வாகனங்களில் கூட்டங்களை அழைத்து வருவர். அதற்காக தினக்கூலி அடிப்படையில் பலர் முன்வருவதும், அவர்களை அழைத்துவர ஏஜன்டுகள் இயங்குவதும் கண்கூடு.
இதுபோன்ற நிகழ்வுகள் முடிந்த பின்போ, முன்போ அப்பகுதியில் காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என மைதானமே கண்கொண்டு பார்க்க இயலாத அளவுக்கு களேபரமாக கிடக்கும்.
ஆனால், சமீபத்தில் மதுரையில் ஹிந்து முன்னணி அமைப்பினர் நடத்திய ஆன்மிக மாநாட்டின்போது இந்த 'இலக்கணம்' எதுவுமின்றி, பல லட்சம் பேர் வந்து சென்ற இடம்போல அல்லாமல், சுத்தமான இடமாக மைதானம் காட்சியளித்தது. பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமின்றி, தண்ணீர், மதுபாட்டில்கள் எதுவும் கண்ணில் தென்படவில்லை.
இதுபோன்ற பெரியளவில் மக்கள் திரளும்போது, அந்தந்த பகுதியில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சக்கை போடுபோடும். இதை எதிர்பார்த்தே கடைகளிலும் 'சரக்கு'களை கூடுதலாக இறக்கி வைத்து காத்திருப்பர். ஆனால், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடந்த போது டாஸ்மாக் விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை.
மதுரை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்டம் என இருபிரிவாக டாஸ்மாக் செயல்படுகிறது. இதில் வடக்கில் 96 கடைகளும், தெற்கில் 135 கடைகளும் உள்ளன. இவற்றில் கடந்த ஜூன் 14ல் 9,415 பாட்டில்கள், ஜூன் 15ல் 10, 900 பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன.
இதேபோல, முருக பக்தர்கள் மாநாடுக்கு முன்தினம் ஜூன் 21ல் 9,140 பாட்டில்கள், ஜூன் 22ல் 11,200 பாட்டில்கள் விற்பனையாகின. இரு வாரங்களிலும் விற்பனையில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.