காங்.,கை விட கூடுதல் 'சீட்' வேண்டும்; தி.மு.க.,வுக்கு வி.சி., திடீர் நிபந்தனை
காங்.,கை விட கூடுதல் 'சீட்' வேண்டும்; தி.மு.க.,வுக்கு வி.சி., திடீர் நிபந்தனை
UPDATED : செப் 08, 2025 02:47 PM
ADDED : ஜூலை 05, 2025 03:18 AM

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை என்பதால், அவர்களை விட கூடுதல் இடங்களை, வி.சி.,க்கு ஒதுக்க வேண்டும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு தெரிவித்தது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் வி.சி., உள்ள நிலையில், பா.ம.க.,வும் வர வேண்டும். இவ்விரு கட்சிகளும் ஏற்கனவே ஒரே கூட்டணியில் இருந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இதற்கு, வி.சி., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், வி.சி., துணை பொதுச்செயலர் வன்னி அரசு, காங்கிரசை விமர்சித்து, தனியார் 'டிவி' நேர்காணலில் பேசிய வீடியோவை, வி.சி., நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், வன்னி அரசு கூறியிருப்பதாவது:
தி.மு.க., கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து வி.சி., தான் வலிமையான கட்சி. அதனால், எங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கும்படி கேட்கிறோம். இப்படி கேட்பது என் போன்றோரின் விருப்பம். இதனால், கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை
தமிழகத்தில் வலுவான கட்சி குறித்த கணக்கெடுப்பை நடத்துங்கள். எந்த கட்சி வலிமையான கட்சி என்று கேளுங்கள். காங்கிரசுக்கு தமிழகத்தில் என்ன இருக்கிறது?
எங்கள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்து விட்டார். எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கிறோம். பா.ஜ., - பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.